• Do. Nov 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மகாளய அமாவாசை வழிபாட்டால் பித்ருக்களின் ஆசி கிடைக்க பெறும்!.

Okt 2, 2024

மகாளய பட்சம் அல்லது மகாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும்.

பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும். பித்துரு வழிபாடு இல்லற வாழ்க்கைக்கு பித்ருக்களின் ஆசியும், ஆசீர்வாதங்களும் கிடைக்கப்பெற்று சிறப்பளிக்கின்றன என்பதனால் எம் முன்னோரால் பின்பற்றப்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.  

பித்ருக்களை நாம் அவமதித்தால் அல்லது அவர்களை உதாசீனம் செய்தால் அவர்கள் நம்மை சபித்து விடுவார்கள் என்பதும், அதனால் நாம் குடும்ப வாழ்கையில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்பதும் இந்துகளின் ஐதீகமாக கூறப்படுகிறது.

தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது மகாளய அமாவாசை. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து வழிபாடு செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை உள்ள காலத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும். அனைத்து முன்னோர்களையும் அப்போது நினைவு கூற வேண்டும். புனித நீர் நிலைகளுக்கு (கடலுக்கு) சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து தர்ப்பணம் செய்வது நல்லது.

நமது வாழ்வில் வரும் இன்ப துன்பங்கள் யாவும் நாம் எமது முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப அமையபெறுகிறது. அதிலே பிதுர் காரியமும் ஒன்றாகும். அதனை நாம் சிரமமாக பார்க்காமல் சிரத்தையுடன் செய்ய வேண்டும். அது தவறின் பிதுர்களின் கோபத்துக்கு ஆளாவோம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.

இந்த பதினைந்து திதி நாட்களில் நம் மூதாதையர் இவ்வுலகை நீத்த நாளில் அவர்களுக்காக தர்ப்பணம் என்ற நீத்தார் கடனை நிறைவேற்றி, மானசீகமாக அவர்களை தம் இல்லத்திற்கு வரவழைத்து, சாதம் இட்டு, அவர்கள் உயிரோடு இருக்கும்போது அவரைப் பராமரித்த பாவனையில் நடந்துகொள்வது இந்த சம்பிரதாயத்தின் நோக்கமாக உள்ளது.

ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் உச்சரிக்கப்படும் மந்திரம்:

’ஏ ஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா ந சபாந்தவஹா

தே சர்வே த்ருப்திம் ஆயாந்து மயா

உஸ்ரீஷ்டைஹி குஸௌதஹைஹி

த்ருப்யத் த்ருப்யத த்ருப்யத்

அவர்களுடைய ஆன்மா எல்லாம் புண்ணியம் அடைய இந்த அமாவாசை நாளில் இந்த தர்ப்பையோடு கல்ந்த நீரை அவர்களுக்காக அர்ப்பணிக்கிறேன் என்று பொருள்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed