தமிழக மாவட்டம் சிவகங்கையில் குடும்பத்தகராறினால் தீக்குளித்த கணவரை காப்பாற்றும் முயற்சியில் மனைவியும் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (60).
மர வியாபாரியான இவர் மனைவி ராஜேஸ்வரியுடன் (52) சண்டையிட்டுள்ளார். இதனையடுத்து தற்கொலை முடிவை அவர் எடுத்துள்ளார்.
திடீரென கையில் மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்ட கண்ணன், தீ பற்ற வைத்துக் கொண்டுள்ளார்.
இதனைப் பார்த்து பதறிய ராஜேஸ்வரி கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக கண்ணன் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில் தீக்காயம் அடைந்த ராஜேஸ்வரி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் கண்ணன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி நேற்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
பொலிஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.