• Do. Nov 28th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்

Aug 21, 2023

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடிச்சீலை வழங்கும் செங்குந்த மரபினரின் இல்லத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜை வழிபாடுகள் நேற்று இடம்பெற்றுபாரம்பரிய முறைப்படி கல்வியங்காடு வேல் மடம் ஆலயத்துக்கு கொடிச்சீலை எடுத்து வரப்பட்டது.

அங்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் கொடிச்சீலை சிறிய ரதத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகவுள்ள மஹோற்சவம் அடுத்த மாதம் 14ம் திகதி இடம்பெறவுள்ள தீர்த்தத் திருவிழா வரை 25 நாள்களுக்குத் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.

இதேவேளை வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு சுற்றுவீதிப்பகுதியில் நேற்று காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்திறக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் எதிர்வரும் செப்டெம்பர் 16ம் திகதி வரை அமுலில் இருக்குமென யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்துள்ளது.

இதன்படி நல்லூர் ஆலய சுற்று வீதிகள் மூடப்பட்டிருக்கும் வேளைகளில் பருத்தித்துறை வீதியூடாக பயணிக்கும் வாகனங்கள், யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர வேறு எந்த வாகனங்கள் உட்பிரவேசிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed