அங்குருவாதொட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் உடல்கள் ஒரே சவப்பெட்டி ஒன்றாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் ஊருதுடாவ பிரதேசத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு நேற்று (22.07.2023) கொண்டுவரப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்றன.
இதன்போது அவர்களது மரணம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரிகளால் வெளிப்படையாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களது உடல்களை விலங்குகள் உட்கொண்டுள்ளமையினால் உடல்கள் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, மேலதிக விசாரணைகளுக்காக அவர்களது உடற்கூற்று மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த இருவரும் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போது, அவர் பொலிஸாரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தன்னை தானே காயப்படுத்தி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர், உயிரிழந்த பெண்ணின் கணவரின் மைத்துனர் என பதில் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்