அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞனை நாடு கடத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.தாயுடன் வாழும் டிக்ஸ்டன் அருள்ரூபன் என்பவரே நாடு கடத்தலுக்கு முகங்கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தாயிடமிருந்து பிரிந்து அவரை நாடு கடத்தலை நிறுத்துமாறு அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவின் தமிழ் அகதிகள் பேரவை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. டிக்ஸ்டனின் 13 வயதில் அவரது தந்தை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்டார்.இலங்கையில் இராணுவத்தின் பல்வேறு துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்த டிக்ஸ்டனின் தாய் ரீட்டா, கடந்த 2012ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்றார்.
ரீட்டாவின் கோரிக்கைக்கு அமைய அவருக்கு புகலிடம் வழங்கப்பட்டது. இதன் காரணமாக தனது மகன் தன்னுடன் இணையும் நாள் வரும் என்ற அவரது நம்பிக்கையும் அதிகரித்தது.2016 இல் டிக்ஸ்டனின் பேத்தியார் காலமானார் இதன் காரணமாக அவன் தனக்கு இருந்த ஒரேயொரு நெருங்கிய குடும்ப உறவையும் இழந்தான்.
ரீட்டா மகனை சட்டபூர்வமாக அவுஸ்திரேலியாவிற்கு அழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார் அந்த விண்ணம் நிராகரிக்கப்பட்டது. எனினும் தனது தாயாருடன் சேர்வதற்காக டிக்ஸ்டன் 2019 இல் விமானம் மூலம் அவுஸ்திரேலியா சென்றார்.எனினும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் குடிவரவு தடுப்புமுகாமில் தடுத்து வைத்தனர். தொடர்ந்தும் அவர் அங்கேயே உள்ளார். கடந்த வாரம் அவர் இலங்கைக்கு விரைவில் நாடு கடத்தப்படுவார் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
மிகவும் துன்பகரமான கடந்தகாலத்திலிருந்து மீண்டு மீண்டும் இணைவதற்கும் அமைதியான வாழ்வை வாழ்வதற்கும் தாயும் மகனும் பெருவிருப்பம் கொண்டுள்ளனர். ஆனால் தற்போதைய நிலை பெரும் துயரத்தையே ஏற்படுத்துகின்றது.தாயாரும் மகனும் போதியவு துன்பங்களை அனுபவித்துள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீள உருவாக்க அனுமதிக்க வேண்டும் என அவுஸ்திரேலியாவின் தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.டிக்ஸ்டனை நாடு கடத்தும் திட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் கைவிடவேண்டும், அவரை முகாமிலிருந்து விடுதலை செய்து நிரந்தர பாதுகாப்பு விசாவை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.