கனடாவிற்கு செல்ல மாணவர் விசா வழங்குவதாகக் கூறி பண மோசடி செய்த ஆண் ஒருவரும், 5 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பு குற்ற மோசடி விசாரணைப் பணியகத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
குறித்த முறைப்பாட்டிற்கு அமைய கோட்டை நீதிமன்றத்திடமிருந்து பெறப்பட்ட சோதனை உத்தரவுக்கு அமைய சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (26) கடவத்தை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இயங்கி வந்த போலி ஆவண நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்த முற்றுகையில், அங்கிருந்த 03 கணனிகள், 03 மடிக்கணினிகள், 04 அச்சிடும் இயந்திரங்கள், 01 ஸ்கேனர், போலி வைப்புச் சான்றிதழ்கள், கணக்கு அறிக்கைகள், தூதரகத்திற்கு அனுப்பத் தயாரிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான பல ஆவணங்கள், பல்வேறு உத்தியோகபூர்வ முத்திரைகள் உட்பட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, சந்தேகத்தின் பெயரில் ஆண் ஒருவரும், ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆண் 68 வயதுடையவர் சீதுவ பிரதேசத்தை சேர்ந்தவா் எனவும், மற்றைய பெண்கள் வத்தளை, ராகம மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்த 47, 45, 31, 28 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசா பெறுவதற்கு வருபவர்களிடம் போலியான லெட்டர்ஹெட்களை பயன்படுத்தி பல்வேறு சொத்து விவரங்கள், நிலையான வைப்பு சான்றிதழ்கள், கணக்கு விவரங்கள் ஆகியவற்றை அவர்கள் வழங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்றையதினம் (27) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.