இலங்கையில் பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகளின் தடை தொடர்பில் சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி இந்த மாத இறுதிக்குள் பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகள் முற்றாக தடை செய்யப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது பிளாஸ்டிக் இடியப்ப தட்டு, மாலை, கரண்டி, கத்தி உள்ளிட்ட பல பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிளாஸ்டிக் கூடைகள், பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பல பிளாஸ்டிக் பொருட்கள் நேற்று முதல் (01.06.2023) தடை செய்யப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபை இதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தாலும், இந்த தடையை நடைமுறைப்படுத்த தாமதமாகலாம் என நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த தடை தொடர்பான வர்த்தமானியின் பல தொழிநுட்ப விடயங்கள் திருத்தப்பட்டு சட்ட வரைவு திணைக்களத்திடம் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகளும் வெளியாகியிருந்தன.
இந்த நடவடிக்கைகள் அநேகமாக அடுத்த வாரத்திற்குள் நிறைவடையும் என்றும், இந்த தடை தொடர்பான வர்த்தமானியை ஜூன் மாத முற்பகுதியில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ்.பத்திரகே தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.