நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் மாலை வேளையில் மழையுடனான வானிலை நிலவி வருகிறது.
நுவரெலியா மாவட்டத்தில் மழையுடன் அடிக்கடி ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கலுகல பிட்டவல, கினித்தேனை, கடவல, வட்டவளை – ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் குடகம, கொட்டகலை, சென்கிளையார், தலவாக்கலை, ரதலல், நானுஓயா உள்ளிட்ட பகுதியில் அடிக்கடி கடும் பனி மூட்டம் காணப்படுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மழை மற்றும் பனி காணப்படும் பகுதிகளில் வாகனங்கள் செலுத்தும் போது தங்களுக்கு உரியத்தான பக்கத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களை மிகவும் எச்சரிக்கையுடன் செலுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை தொடர்ச்சியாக மாலையில் மழை பெய்து வருவதனால் பல பிரதேசங்களில் மண் சரிவு மற்றும் கற்கள் புரளும் அபாயமும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதேநேரம் கடந்த பல மாதங்களாக வறட்சியான காலநிலை காணப்பட்டதனால் காசல்ரி, மௌசாக்கலை, கெனியோன் லக்ஸபான, நவ லக்ஸபான, பொல்பிட்டிய, மேல்கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிகவும் குறைவடைந்துள்ளன.இந்நிலையில் தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதனால் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்வடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.