யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று (23) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் நெடுந்தீவு பொலிஸாருடன் இணைந்து நியமிக்கப்பட்ட 03 விசேட பொலிஸ் குழுக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் புங்குடத்தீவு பகுதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் 51 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் சுமார் 20 வருடங்களாக வெளிநாட்டில் இருந்து வந்தவர் எனவும் இந்த நபர் இந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வருபவர் எனவும் தெரியவந்துள்ளது.
எனினும், சந்தேகநபர் முதியவர்களின் தங்கப் பொருட்களை கொள்ளையடிப்பதற்காக வீட்டுக்குள் பிரவேசித்த போது, அங்கிருந்தவர்கள் அந்த நபரை அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.
இதனையடுத்து கொலை செய்துவிட்டு தங்கத்துடன் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக நெடுந்தீவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.