இலங்கையை சேர்ந்த ஐந்து தமிழ் அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
ருவாண்டா தலைநகரமான கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் 5 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
22 வயதான யுவதியையும் இலங்கைக்கு திருப்பியனுப்பவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையிலேயே யுவதி தையல் ஊசியை பாதியாக உடைத்து இரண்டு துண்டுகளையும் விழுங்கியுள்ளார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்து அவர்கள் வெளியிட்ட காணொளி வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் கூறியுள்ளதாவது,
ஆரம்பத்தில் டியாகோ கார்சியா தீவில் நுழையும் போது நன்றாக வரவேற்றிருந்ததாகவும் ஆனால் தற்போது தமது சுயமரியாதையை இழப்பது போன்று உணர்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளியுலகம் தெரியாமல் சிறையில் அடைக்கப்படுவது போன்றே வாழ்க்கை கடந்து செல்வதாக அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இவர்களுடன், மேலும் சுமார் 65 பேர் டியாகோ கார்சியா தீவில் உள்ளதாகவும் விலங்குகளை போன்று அடைக்கப்பட்டுள்ளதாக இவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
உயிர்வாழ்வதற்கான சுழல் அந்த தீவிலும் தற்போதுள்ள தாம் தங்கியுள்ள ருவாண்டா தலைநகரமான கிகாலியும் வாழ முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
பாதிக்கப்பட்ட மற்றுமொரு இளைஞன் கூறுகையில் தான் இந்தியாவில் பிறந்த நாடற்ற மனிதன் என குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தனக்கு மனநோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த போதும் அதற்கான சிகிச்சைகள் வழங்கப்படவில்லை என்கின்றார்.