கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா கடற்படை அறிவித்துள்ளது.
கச்சதீவு திருவிழா நாளை ஆரம்பித்து 4 ஆம் திகதி வரை 2 நாட்கள் இடம்பெறவுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு நாளை மாலை 4.30 மணிக்கு அந்தோனியாரின் உருவம் பதித்த கொடி ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் ஏற்றப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிலுவைப் பாதை திருப்பலி, நற்கருணை ஆசீர், இரவு தேர்ப்பவனி ஆகியன நடைபெறவுள்ளன.
4 ஆம் திகதி காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்ற பின்னர், கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறவுள்ளது.
இந்தத் திருவிழாவில் இந்திய – இலங்கை பக்தர்கள், அரச பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.
பக்தர்களின் பாதுகாப்பு
இந்த நிலையிலேயே பக்தர்களுக்கு தேவையான சுகாதார, மற்றும் குடிநீர் வசதிகள், தற்காலிக கூடாரங்கள், வீதிகள், மின்சார வசதிகள், இறங்குதுறை ஆகியவற்றை சிறிலங்கா கடற்படையினர் அமைத்து வருகின்றனர்.
அத்துடன் பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறிலங்கா கடற்படையின் உயிர்காக்கும் குழுக்கள், மற்றும் மருத்துவ குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன.