அமெரிக்காவில் ஒரு தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே ஏற்படும் மோசமான பனிப்புயல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு பெரும்பாலான பகுதிகளில் கடுங்குளிர் ஏற்பட்டுள்ளது. இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் -40 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டுள்ளது. இது மேலும் குறைந்து மைனஸ் 60 டிகிரி பாரன்ஹீட்டை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், குளிர் கால புயல் எப்போதும் இல்லாத அளவுக்கு வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
பெரும்பாலான இடங்களில் குறிப்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரம் உள்பட பல மாகாணங்களில் மைனஸ் டிகிரி வெப்பநிலை நிலவுதால், அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மான்டானா மகாணத்தில் மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது. இதேபோல், Des Moines பகுதியில் மைனஸ் 37 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது. அத்துடன் பனிப் புயல் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இந்த மோசமான பனிப்புயலால் விமான நிலையங்கள் மூடப்பட்டு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்று மட்டும் அமெரிக்காவில் 3,100 விமானங்கள் இரத்துசெய்யப்பட்டுள்ளன. 10 ஆயிரம் விமானங்கள் தாமதமாகியுள்ளன.
பனிக்கட்டிகளால் நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. உறைய வைக்கும் பனிப்பொழிவு அங்குள்ள மக்களை அச்சுறுத்தி அத்தியாவசிய தேவைக்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் மக்கள் கவனமுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குப் படையெடுத்து வருகின்றனர். இப்படி சுமார் 10 கோடி பேர் தங்கள் சொந்த ஊர் திரும்பலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குளிர் மிக மோசமாக உள்ள நிலையில், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதைத் தவிர்க்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிபர் பைடனும் அறிவுறுத்தியுள்ளார்.