வெள்ளவத்தையில் பெண் ஒருவர் பல லட்சம் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வேலை செய்து வந்த பெண்ணொருவரே அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த 34 லட்சம் ரூபா பெறுமதியான 17 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளதாக வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, சந்தேக நபரான கிருளப்பனையை சேர்ந்த 42 வயதான பெண்ணை குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
வீட்டின் உரிமையாளர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் சந்தேக நபரான பெண்ணை கைது செய்துள்ளதுடன் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களின் ஒரு பகுதி கிருளப்பனையில் உள்ள வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றியுள்ளனர்.
ஏனைய ஆபரணங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான 60 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஆடம்பர காரை எடுத்துச் சென்று போலி ஆவணங்களை பயன்படுத்தி அதனை தனது பெயருக்கு மாற்றி பயன்படுத்தி வந்த ஒருவரையும் தாம் கைது செய்துள்ளதாக காவல்துறைியனர் தெரிவித்துள்ளனர்.
காரின் உரிமையாளர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய வெள்ளவத்தை காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, சந்தேக நபர், காருடன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.