நாளை (11) முதல் அமுலுக்கு வரும் வகையில், உள்நாட்டு மற்றும் திறமையற்ற துறைகளுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் பெண்களை அனுப்பும் நடைமுறையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு பணிபுரியச் சென்ற பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக பணியகம் மேலும் தெரிவிக்கிறது.
இவர்களில் பெரும்பாலானோர் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரியச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் சென்று வேலையில்லாமல் இருப்பதால் அவர்கள் மோசமாக நடத்தப்படுவதாகவும், எந்தவொரு நிறுவனமோ அல்லது நபரோ அவர்களுக்கான பொறுப்பை ஏற்க முன்வரவில்லை எனவும் இலங்கைத் தூதரகங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுற்றுலா விசா மூலம் பெண்களை திறமையற்ற தொழில்களுக்கு பரிந்துரைப்பதை தடை செய்யுமாறு கைத்தொழில் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட 570 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், முறைப்பாடு செய்தவர்களிடமிருந்து மோசடியாகப் பெறப்பட்ட 28,383,000.00 ரூபாவை மீளப் பெறுவதற்கு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பணியகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு சம்பவங்கள் தொடர்பில் பணியகத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் 17 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டு 43 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் அறிவித்துள்ளது.
மேலும், இவ்வருடம் சட்டவிரோதமாக தொழில் நிமித்தம் வெளிநாடு செல்ல முயன்ற 586 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலைய பிரிவினரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த சிலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.