• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சோமாலியா வறட்சி!இறந்த குழந்தையை புதைக்க முடியாத அளவு பசிக்கொடுமை

Okt. 6, 2022

40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சோமாலியாவில் மோசமான வறட்சி நிலவுவதால் உயிரிழக்கும் இளம் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மேலும் கூடுதல் உதவிகள் வரும் வாரங்களிலோ அல்லது சில நாட்களிலோ கிடைக்கவில்லை எனில் நாட்டில் பெரும் பேரழிவு நேரிடும் அபாயம் உள்ளதாக அரசு அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

11 வயதான தாஹிரின் பசியால் ஒட்டிப்போன கன்னங்கள் வழியே கண்ணீர் வழிந்தோடுகிறது.

„இதில் இருந்து நான் பிழைத்திருக்க விரும்புகின்றேன்,“ என்று அமைதியான குரலில் சொல்கின்றான் அந்த சிறுவன்.பைடோவா நகருக்கு வெளியே தூசு படிந்த தரையில் அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகையில் குடும்பத்தினருடன் அந்த சிறுவன் அமர்ந்திருக்கிறான். அவன் அருகில் மிகவும் களைப்புடன் அமர்ந்திருக்கும் அவனது தாய் பாத்துமா ஓமர், ‚அழாதே‘ என்று மகனைத் தேற்றுகிறார்.

நீ அழுவதால் உன் சகோதரன் உயிரோடு வந்து விடப்போவதில்லை. எல்லாம் நல்லதற்கே,“ என்று அவனது தாய் ஆறுதல் சொல்கிறார்.

பாத்துமாவின் இரண்டாவது மகனான 10 வயதான சாலாட், இரண்டு வாரங்களுக்கு முன்பு பட்டினியால் இறந்து விட்டான். இவர்களுடைய கிராமத்தில் இருந்து பைடோவா நகருக்கு அருகே வந்த பின்னர் இது நடந்துள்ளது. இவர்களுடைய கிராமத்தில் இருந்து மூன்று நாட்கள் நடந்தே அவர்கள் இங்கு வந்தனர்.

இறந்துபோன சிறுவனின் உடலை இவர்கள் தற்போது குடியிருக்கும் தற்காலிக கொட்டகைக்கு அருகே சில மீட்டர்கள் தொலைவில் பாறை போன்ற கடினமான தரையில் குழி தோண்டி புதைத்திருக்கின்றனர். அந்த சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தில் ஏற்கெனவே குப்பைகள் குவிந்திருப்பதால், புதிதாக வந்து அந்த பகுதியில் கொட்டகைகளை அமைக்கும் மக்களால் அவ்வளவு எளிதில் அந்த சமாதியை கண்டுபிடிக்க முடியாது.

„என் மகன் இறந்த துயரத்தைக் கூட இன்னும் முழுமையாக அழுது தீர்க்கவில்லை. அதற்கு நேரம் இல்லை. மற்ற பிள்ளைகளையாவது உயிரோடு வைத்திருப்பதற்காக உணவு தேடவும், வேலை தேடவும் வேண்டியிருக்கிறது,“ என்று சொல்கிறார் பாத்துமா. 9 மாதங்களே ஆன மகள் பில்லீயை தாலாட்டியபடியே, 6 வயதே நிரம்பிய இன்னொரு மகளான மரியம் தொடர்ந்து இருமிக் கொண்டிருப்பதைத் திரும்பிப் பார்க்கிறார் பாத்துமா.

மறுபுறம் தென்கிழக்கை நோக்கிய தூசுபடிந்த சாலை. கடல் பகுதியை நோக்கிய, சோமாலியா தலைநகர் மொகதிஷுவை நோக்கிய பாதையில் இடம்பெயர்ந்து குடியேறியுள்ள இன்னும் சில குடும்பத்தினரும் இது போன்ற மிகவும் துயரமான கதைகளை சொல்கின்றனர்.

அவர்கள் உணவு தேடி, தண்ணீரின்றி வறண்ட பகுதிகளை கடந்து வெறும் காலில் நீண்ட பயணத்தை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.

„என்னுடைய மகளை புதைப்பதற்கு என்னிடம் திராணியில்லை“

முகாம்களில் இருக்கும் மூன்றில் இரண்டு பங்கினர் கர்ப்பிணிகள் மற்றும் இளம் சிறார்கள், துல்லிய ஊட்டசத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூடவே அதிக உயிரிழப்பையும் ஏற்படுத்தியதாக கூறியுள்ளது. இந்த அறிகுறியைக் கொண்டே என்றோ உள்ளூரில் இந்த நிலைமையை ‚பஞ்சம்‘ என்று அறிவித்திருக்கலாம்.

„என் கண் முன்னால் (மூன்று வயதான ஃபாஹிர்) என் மகள் உயிரிழந்தாள். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை,“ என்கிறார் பாத்துமா சோகத்துடன். புலோ சியர் என்று அழைக்கப்படும் கிராமத்தில் இருந்து பைடோவா நகரின் புறநகருக்கு தனது 9 குழந்தைகளுடன் பாத்துமா நடந்தே வருவதற்கு 15 நாட்கள் ஆகியிருக்கிறது.

„பத்து நாட்களாக இவளை தூக்கி வந்தேன். ரோட்டோரத்தில் அவளை போட்டு விட்டு நாங்கள் வந்தோம். அவனை புதைப்பதற்கு எங்களிடம் போதுமான சக்தி இல்லை. ஹைனாக்களின் (கழுதைப்புலிகள்) ஊளை அவள் பிணத்துக்கு அருகே இருந்ததை நாங்கள் கேட்டோம்,“ என்று தொடர்ந்து விவரித்தார்.

„நான் என்னுடன் எதையும் எடுத்து வரவில்லை. வீட்டில் எடுத்து வருவதற்கும் ஒன்றும் இல்லை. மாடுகள் இறந்து விட்டன. நிலம் வறண்டு விட்டது,“ என ஒரு கையில் கயிற்றின் ஒரு பகுதியை பிடித்தபடி ஹபிபா மொஹமூத் (50) சொல்கிறார். ஒருபோதும் தன்னுடைய கிராமத்துக்கு மீண்டும் திரும்பிப் போகப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிலவிய வறட்சிகள், அதிகரித்து வரும் பருவநிலை மாற்றம் ஆகியவை, பல நூற்றாண்டுகளாக கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடர்ந்து இருந்து வந்த அனுபவபூர்வமான அமைதியான கிராமப்புற வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக அந்த பகுதிக்கு வந்தவர்களைப் போல, ஹபிபாவும் தனது குடும்பத்துக்காக மரக்கிளைகள், பழைய கார்டு போர்டு, பிளாஸ்டிக் ஷீட் ஆகியவற்றைக் கொண்டு தற்காலிக கொட்டகை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இரவு குளிர் தொடங்கும் முன்பு அந்த வேலையை முடிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார். அதன் பின்னர்தான், தனது ஐந்து குழந்தைகளுக்கும் உணவும், மருத்துவ உதவியும் கிடைக்குமா என்று தேட அவர் திட்டமிட்டுள்ளார்.

நகரின் முக்கிய மருத்துவமனையின் நோயாளிகள் அனுமதி பிரிவில் உள்ள மருத்துவர் அப்துல்லாஹி யூசுஃப் படுக்கைகளுக்கு இடையே தனது சிறிய, மெல்லிய நோயாளிகளை பார்த்தபடி சென்று வருகிறார். அவர்களில் பெரும்பாலானோர் 2 மாதம் முதல் 3 வயது வரையே ஆன குழந்தைகள்.

அனைவருமே ஊட்டசத்துக்குறைபாட்டால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் புதிய நோயான தட்டம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சில பச்சிளம் குழந்தைகள் அழுவதற்கும் கூட சக்தியைக் கொண்டிருந்தன. பல குழந்தைகளின் தோல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரமான பசி கொடுமையின் காரணமாக அவர்களின் உடலில் ஏற்பட்ட கட்டிகள் உடைந்து இருக்கின்றன.

„பலர் மருத்துவமனைக்கு வரும் முன்பே இறந்து விட்டனர்,“ எனும் மருத்துவர் அப்துல்லா, முனகியபடி இருக்கும் இரண்டு வயது குழந்தையின் கையில் நரம்புக் குழாயை இணைப்பதற்கு போராடிக்கொண்டிருக்கும் தமது குழுவினரை பார்த்தபடி இருக்கிறார்.

„மக்கள் இறப்பது, அச்சுறுத்துகிறது“

தென்மேற்கு பிராந்தியத்தில் பஞ்சம் வரவிருக்கிறது என்று பல மாதங்களாக சர்வதேச அமைப்புகள், சோமாலிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தபடி இருந்தனர். தனது மருத்துவமனையில் ஏற்கெனவே குழந்தைகளுக்கான ஊட்டசத்து அளிக்கும் பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர் அப்துல்லாஹி சொல்கிறார்.

„சில நேரங்களில் எங்களுக்கு குறைவாகவே மருத்துவ பொருட்களை விநியோக்கின்றனர். மக்கள் இறந்து கொண்டிருப்பது உண்மையில் அச்சுறுத்துவதாக இருக்கிறது. எங்களால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. உள்ளூர் அரசாங்கம் இதனை உரிய முறையில் நன்றாக கையாளவில்லை. வறட்சிக்காகவோ இடம் பெயர்ந்து வரும் குடும்பத்தினருக்காவோ முன்பே திட்டமிடப்படவில்லை,“ என விரக்தியுடன் அந்த மருத்துவர் கூறுகிறார்.

சோமாலியாவில் வறட்சி

இந்த விஷயத்தில் தோல்வி அடைந்து விட்டதாக ஒப்புக் கொள்கிறார் உள்ளூர் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர்.

„நாம் இப்போது இருப்பதை விடவும், இன்னும் வேகமாக இருக்க வேண்டும். துல்லியமாக, மேலும் பலனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது,“ என்கிறார் பைடோவா நகரை சுற்றியுள்ள முகாம்களில் ஒன்றைப் பார்வையிட்ட தென்மேற்கு மாநிலத்தின் மனிதநேய உறவுகளுக்கான அமைச்சர் நசீர் அருஷ். மேலும் அதிக சர்வதேச உதவிகள் தேவை என்பது முக்கியமானது என்று அவர் வலியுறுத்துகிறார்.

„எங்களுக்கு தேவைப்படும் உதவிகளை நாங்கள் பெற முடியாவிட்டால், நூற்றுக்கணகான, ஆயிரகணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும். இப்போது நாங்கள் செய்து கொண்டிருக்கும் இதற்கு எங்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தேவை இருந்தது. உண்மையில் நாங்கள் பின்தங்கியிருக்கின்றோம். ஏதேனும் நடக்காவிட்டால்(விரைவாக). இந்த பகுதியில் ஏதேனும் பேரழிவு நேரக்கூடும் என்று நான் கருதுகின்றேன்,“ என்று சொல்கிறார் அவர்.

அதிகாரபூர்வமாக பஞ்சம் என்று அறிவிப்பதற்கான செயல்பாடுகள் சிக்கல் நிறைந்த ஒன்றாகும். நம்பிக்கையான, துல்லியமான தரவுகளை கண்டறிவது கடினம், அரசியல் கருத்துக்களும் இதில் அடங்கியிருக்கின்றன.

மொகதிஷுவில் உள்ள பிரிட்டன் தூதர் கேட் ஃபாஸ்டர், அது அவசியமான தொழில்நுட்ப நடைமுறை என்று கூறுகிறார். 2011ஆம் ஆண்டில் வறட்சி ஏற்பட்டபோது, பஞ்சம் என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பு 2,60,000 பேரில் பாதி பேர் இறந்து விட்டனர் என்பதை சுட்டிக்காட்டினார்.

சோமாலியாவுக்கு மேலும் நிதியை கொண்டு வருவதற்கான சர்வதேச முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் அதிபரின் பிரதிநிதி அப்டிரஹ்மான் அப்திஷாகுர், அமெரிக்க அரசுக்கு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். „எங்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கின்றனர்,“ என அண்மையில் அமெரிக்கா அளித்த நிதி உதவியை சுட்டிக்காட்டி அவர் பேசினார்.

ஆனால் , மேலும் கூடுதல் உதவி இல்லாவிட்டால், சோமாலியாவின் ஒரு பகுதியில் உள்ளூர்மயமாக்கப்பட்ட நெருக்கடி விரைவில் கட்டுப்பாட்டை மீறும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

„நாங்கள் பஞ்சம் குறித்து எச்சரிக்கை செய்திருக்கின்றோம். ஆனால், அதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு போதுமான அளவில் இல்லை,“ என்று அப்திஷாகுர் கவலை தெரிவிக்கிறார்.

„பஞ்சம் கணிக்கப்பட்டிருந்த ஒன்றுதான். சோமாலியாவில் சில பகுதிகளில் , சில சிறுபகுதிகளில் (ஏற்கனவே) வந்திருக்கிறது. ஆனால், பேரழிவான ஒன்றாக மாறுவதற்கு முன்பு இன்னும் கூட தடுக்க முடியும்,“ என்று கனடாவின் டொரொன்டோவில் இருந்து தொலைபேசி வழியாக சொல்கிறார்.

தப்பிக்கும் பெண்கள், தாக்குப்பிடிக்கும் ஆண்கள்

மதிப்பீடுகளில் வித்தியாசங்கள் இருக்கலாம். கடந்த சில மாதங்களில் பைடோவாவின் மக்கள் தொகை தோராயமாக நான்கு மடங்கு அதிகரித்து 8 லட்சமாக உள்ளது.

இங்கு புதிதாக வரும் எவரும், பார்த்த நொடியில் ஒன்றை கவனிக்கலாம் – கிட்டத்தட்ட புதிய வரவுகள் அனைவருமே 18 வயதுக்கு மேற்பட்ட‍ பெண்களாகவே இருக்கின்றனர்.

சோமாலியாவில் போர் நடந்து கொண்டிருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு கவிழ்ந்ததில் இருந்து மோதல் வெவ்வேறு வடிவங்களில் நீடித்து வருகிறது. ஏறக்குறைய நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் இது தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆயுதமேந்திய குழுக்களின் போரில் பங்கேற்க ஆண்கள் அவர்களது குடும்பங்களில் இருந்து பிரித்து செல்கின்றனர்.

பைடோவாவுக்கு பெரும்பாலானோர் வருவது போல, ஹஜிதா அக்பர், அல்-சாகேப் என்ற இஸ்லாமிய தீவிரவாதக் குழுவின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து தப்பி வந்திருக்கிறார்.

„இப்போதும் கூட என்னுடைய குடும்பத்தினரின் பிறநபர்களிடம் இருந்து எனக்கு அழைப்புகள் வருகின்றன. அங்கு அரசுக்கும் அல்-ஷாபாப் அமைப்புக்கும் மோதல் நடைபெறுகிறது. என்னுடைய உறவினர்கள் ஓடி விட்டனர். வனப்பகுதிகளில் மறைந்திருக்கின்றனர்,“ என பைடோவாவில் உள்ள சிறிய மருத்துவமனையில் தன்னோடு ஒட்டிக்கொண்டிருக்கும் குழந்தையுடன் உட்கார்ந்திருந்தபடி சொல்கிறார்.

கணவர்கள் மற்றும் மூத்த மகன்களை தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை விட்டு வெளியேறுவதை போராளிகள் தடுக்கிறார்கள் என்றும், குழுவால் பல ஆண்டுகளாக மிரட்டி பணம் பறித்து வருவதைப் பற்றியும் இதர பெண்கள் பேசினர்.

அல்-ஷாபாப் குழு பைடோவாவை சுற்றி இல்லை. ஆனால், அகதிகளுக்கோ இது தொடர்ந்து ஒரு நிச்சயமற்ற பகுதியாகவே இருக்கிறது. சர்வதேச உதவி அமைப்புகள், வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் அங்குள்ள பகுதிகளுக்கு சென்று வருவதற்கு பலத்த பாதுகாப்பு தேவைப்படுகிறது. நகருக்கு வெளியே மேற்கொள்ளும் எந்த ஒரு பயணமும் ஆபத்தானதாகவே கருதப்படுகிறது.

„மக்கள் கடும் நெருக்கடியில் இருப்பதை நாங்கள் பார்க்கின்றோம். சில நேரங்களில் மிகவும் நம்பிக்கையற்றதாக உணர முடிகிறது,“ என மத்திய மற்றும் தெற்கு சோமாலியாவுக்கான ஐநா குழந்தைகள் நிதியத்தின் யுனிசெஃப் அமைப்பின் தலைவரான சார்லஸ் நிசுக்கி கூறுகிறார்.

சில மதிப்பீடுகளின் கூற்றுப்படி, தொடர்ந்து அல்-ஷாபாப் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறட்சியில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. பயங்கரவாத குழுக்களுக்கு பயனளிக்கும் எந்தவொரு உதவியையும் தடுக்கும் கடுமையான அமெரிக்க அரசாங்க விதிகள் காரணமாக பாதிப்பில் இருக்கும் சமூகத்தினருக்கு உதவிகள் சென்றடைவதற்கான முயற்சிகள் சிக்கலை சந்திக்கின்றன.

ஆனால், சர்வதேச அமைப்புகள், சோமாலியா அதிகாரிகள் உள்ளூர் அளவில் உள்ள சிறிய குழுக்களின் உதவியுடன் மக்களுக்கு உதவிகள் கிடைக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். போருக்கு உள்ளான சில பகுதிகளில் விமானத்தின் வழியே உதவிப் பொருட்களை போடுவதற்கும் இப்போது திட்டமிட்டுள்ளனர்.

அதிகாரபூர்வமற்ற வகையில் பேசிய நிவாரண உதவி பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர், உணவு அல்லது நிதி உதவி அல்-ஷபாப் அமைப்பை சென்றடைவதில்லை என்று உத்தரவாதம் அளிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பதை ஒப்புக்கொண்டார்.

நாம் அப்பாவியாக இருக்க வேண்டாம், (அல்-சாகேப்) எல்லாவற்றிற்கும் வரி விதிக்கப்படுகிறது, பண நன்கொடைகளுக்கும் கூட வரி விதிக்கின்றனர்“ என்று அவர்கள் கூறினர்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த தீவிரவாத குழு ஒரு நன்மதிப்பை உருவாக்கி உள்ளது, வன்முறைக்காக, மிரட்டலுக்காக மட்டுமின்றி, அலுவல்பூர்வ ஊழலுக்காக கடினமாக சம்பாதித்த நற்பெயருடன் ஒரு நாட்டில் நீதி வழங்குவதற்காகவும் அந்த நன்மதிப்பை பெற்றுள்ளது.

பைடோவாவுக்கு நெருக்கமாக உள்ள நான்கு கிராமங்களில் அல்-ஷாபாப் ஒரு ஷரியா நீதிமன்ற கட்டமைப்பை நடத்தி வருகிறது. நகரவாசிகள் அதனை உபயோகித்து வருகின்றனர். மொகதிஷு மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதியை சேர்ந்த மக்கள் வணிக மற்றும் நிலத் தகராறுகளை இந்த நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்கின்றனர்.

மேலும் வடகிழக்கில், அல்-ஷாபாப் அமைப்புக்கு எதிராக உள்ளூர் சமூகத்தினர், குல போராளிகள் கிளர்ந்தெழுந்தனர். இப்போது அவர்கள் மத்திய அரசின் பின்னால் இருந்து செயல்படுகின்றனர். கடந்த சில வாரங்களாக நகரங்கள், கிராமங்களில் குழுக்களை செயல்படுத்தி வருகின்றனர்.

ராணுவ வெற்றிகள் நம்பிக்கையின் எழுச்சியைத் தூண்டியுள்ளன. ஆனால், இது பஞ்சத்துக்கு எதிரான போராட்டத்துக்கு உதவுமா அல்லது சோமாலியா அரசை வெறுமனே திசை திருப்பும் செயலா என்பது தெளிவாக தெரியவில்லை.

„இது இருக்கலாம் அல்லது இல்லாமலும் (உதவிகள்)இருக்கலாம். இது மேலும் அதிகம் பேர் (பொதுமக்கள்) இடம் பெயர்ந்து செல்வதை அதிகரிக்கும் என்று நான் கருதுகின்றேன். அல்லது அரசு மேலும் பல பகுதிகளை விடுதலை செய்ய வேண்டும். மக்களுக்கு மேலும் உதவிகள் சென்றடைய வேண்டும். ஆகவே, நாங்கள் அனைத்து தரப்பில் இருந்தும் இதனை எதிர்பார்க்கின்றோம்,“ என்கிறார் உள்ளூர் அமைச்சர் நசீர் அருஷ்.

சோமாலியாவில் வறட்சி

பட மூலாதாரம்,BBC/ ED HABERSHON

பைடோவா நகரானது – பல ஆண்டுகால மோதல்கள் மற்றும் புறக்கணிப்புளுக்கான அடையாளங்களை வடுக்களாகக் கொண்ட குறுகிய, கூழாங்கற்களால் ஆன தெருக்கள் நிறைந்த ஒரு பரபரப்பான நகரமாகும். இங்கு அத்தியாவசிய தேவைகளான அரிசி, உள்ளிட்ட பொருட்களின் விலை கடந்த மாதம் இரு மடங்காக இருந்தது. இதற்கு வறட்சிதான் காரணம் என பல நகரவாசிகள் குற்றம்சாட்டினர். மேலும் சிலரோ இந்த பிரச்னையை அதற்கும் அப்பால் பார்க்கின்றனர்.

„மாவுப் பொருட்கள், சர்க்கரை, எண்ணைய் ஆகியவை அனைத்தும் அதே அளவுக்கு உயர்ந்துள்ளன. சில நாட்களில் நாங்கள் உணவு சாப்பிடுவதில்லை. ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையேயான போர் பற்றி நான் கேள்விப்படுகின்றேன். இந்த பிரச்னைகளுக்கெல்லாம் அதுதான் காரணம் என்று என்று சொல்கின்றனர்,“ எனும் 38 வயதான சுக்ரி மவுலிம் அலி, தனது வறண்டு போன கிணறு மற்றும் காய்ந்து போன காய்கறி பயிருக்கு இடையே நடந்து செல்கிறார்.

இந்தப் பகுதியில் ஆழமாக பரவும் பஞ்சத்தைத் தடுப்பதற்கான போராட்டத்தில் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும். சோமாலியாவின் புதிய அரசாங்கம் எதிர்காலத்தைப் பற்றிய இருப்புக்கான கேள்விகளுக்கு தீர்வு காண முற்படுகிறது.

„வறட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, அல்-ஷபாபுக்கு எதிராக போரிடுவது, (சர்வதேச) காலநிலை நீதி நிதி அணுகலுக்கான பிரசாரம் என செயல்படுவது ஒரு சவாலான பணியாக இருக்கிறது,“ என்றார் அப்திரஹ்மான் அப்திஷாகுர்.

„நாங்கள் இளம்மக்கள் தொகையை கொண்டுள்ளோம். மகத்தான புலம்பெயர்ந்தோர் உள்ளனர், துடிப்பான தொழில் முனைவுத் திறன்கள் உள்ளன. இவையெல்லாம் நமக்கு நம்பிக்கை தருகிறது. இது சவாலானதுதான். ஆனால் எங்களுக்கு மாற்று யாரும் இல்லை,“ என்கிறார் அப்திஷாகுர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed