• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோக குழாய்களில் நாசவேலை

Sep 28, 2022

ஐரோப்பாவிற்கான பிரதான இரண்டு எரிவாயு குழாயில் கசிவு ஏற்படுவதற்கு ரஷ்யாவே காரணம் என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதனை ரஷ்யா முற்றாக நிராகரித்துள்ளது.

இதுவொரு பயங்கரவாத தாக்குதல் எனவும் உக்ரைன் அதிபரின் ஆலோசகர் கூறியுள்ள அதேவேளை, இதுவொரு நாசவேலை என ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவிற்கு எரிவாயுவை விநியோகிக்கும் முக்கியாமான நோர்ட் ஸ்றீம் 1 மற்றும் 2 குழாய் கட்டமைப்பில் சேதம் ஏற்பட்டுள்ளமை பாரிய கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழாய் கட்டமைப்பு திட்டமிட்டே சேதமாக்கப்பட்டதாக கூறியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவை நேரடியாக குற்றஞ்சாட்டுவதை தவிர்த்துக்கொண்டுள்ளது.

திட்டமிட்டு எரிவாயு விநியோகத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் இந்தச் செயற்பாட்டிற்கு பலமான பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் ஊர்சுலா வெண்டர் லெயன் தெரிவித்துள்ளார்.

குறித்த குழாய் கட்டமைப்புக்களில் கசிவு ஏற்படுவதற்கு முன்னர் நீருக்கு கீழே வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நில அதிர்வு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் குழாயில் இருந்து நீருக்குள் கசிவு ஏற்படும் காணொளி ஒன்றையும் டென்மார்க் பாதுகாப்பு கட்டளை மையம் வெளியிட்டுள்ளது.

அத்துடன் குழாய்களில் ஏற்பட்டுள்ள எரிவாயு கசிவு, ஒருவாரத்திற்கு நீடிக்கும் என டென்மார்க்கின் எரிசக்தி அமைச்சர் டான் ஜோர்கென்சன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் போர்ன்ஹோம் தீவிற்கு அருகிலுள்ள பகுதியை கப்பல்கள் பயன்படுத்தவதை தவிர்க்க வேண்டும் என டென்மார்க் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்தக் கசிவினால் ஐரோப்பாவின் எரிசக்தி மீள்திறனுக்கு பாதிப்பு ஏற்படாது என தாம் கருதுவதாக தெரிவித்துள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அன்ரனி பிளிங்கன், இந்தச் சம்பவம் தொடர்பில் நேரடியாக ரஷ்யாவை குற்றஞ்சாட்டுவதையும் தவிர்த்துக்கொண்டுள்ளார்.

ஊர்சுலா வெண்டர் லெயனின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் ஐரோப்பிய பேரவையின் தலைவர் சார்ள்ஸ் மிச்சேல், நோர்ட் ஸ்றீம் குழாய் கட்டமைப்பு மீதான நாச செயல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிவாயு விநியோகத்தை சீர்குலைக்கும் முயற்சி என கூறியுள்ளார்.

எரிவாயு குழாயில் ஏற்பட்டுள்ள கசிவு தொடர்பில் கடற்படையின் பங்களிப்புடன் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும் எரிவாயு விநியோக குழாயில் ஏற்பட்ட கசிவுக்கு தாமே காரணம் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு முட்டாள் தனமானது என்பதுடன், நகைப்பிற்கிடமான ஒன்றெனவும் ரஷ்யா கூறியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed