தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞர் ஒருவர் விபத்தில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளின் சாரதி மதுபோதையில் இருந்ததால் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வேலணை மாவட்டம் நான்காம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீபன் தனுசியன் (வயது-18) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
“இளைஞர் கடந்த 25ஆம் திகதி பிறந்தநாள் விழாவிற்கு சென்றுள்ளார்.ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்து கடைக்கு சென்றுள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மதுபோதையில் இருந்துள்ளார். அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை. அவரும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தார்.
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி இளைஞர்களை தூக்கி வீசியது. தலையில் பலத்த அடிபட்டதால் மயங்கி விழுந்தார்.
உடனடியாக குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் 9 நாட்கள் சிகிச்சை பலனின்றி நேற்று குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயங்களுடன் உயிர் தப்பினார்” என விசாரணையில் தெரியவந்துள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிரேமகுமார் நேற்று (03) மரண விசாரணையை மேற்கொண்டார்.