• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்று குழந்தைகள் மகிழும் கிருஷ்ண ஜெயந்தி

Aug 19, 2022

இந்துக்கள் வாழும் நாடுகளில் எல்லாம் இன்று  கிருஷ்ண ஜெயந்தி  வெகு கோலாகலமான கொண்டாடப்படுகின்றது.

ஆவணி மாதம் அஷ்டமி திதி திதிகளில் அஷ்டமி, நவமி ஆகாத நாட்கள் என்பார்கள். ஆனால் பகவான் ராமர் அவதரித்தது நவமி திதியில், கிருஷ்ணர் அவதரித்தது அஷ்டமி திதியில்.

எனவே இந்த இரண்டு திதிகளுமே வழிபாட்டிற்கு உரிய திதிகளாக மாற்றி விட்டார் மகாவிஷ்ணு. ஒருத்தி மகனாய் பிறந்து இன்னொருத்தியின் மகனாக வளர்ந்தார் ஸ்ரீகிருஷ்ணர்.

கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி

பிறந்தது சிறையாக இருந்தாலும் வளர்ந்தது அன்னை யசோதாவின் மடியில்தான். பகவான் கிருஷ்ணரின் பிறந்தநாளை கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நேற்றும் இன்றும் இரண்டு தினங்கள் ஸ்ரீ ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் பிறந்தநாளையே கிருஷ்ண ஜெயந்தியாக இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். தன் வீட்டு குழந்தையின் பிறந்த நாளை எப்படி பெற்றோர்கள் சந்தோஷமாக கொண்டாடுவார்களோ அதே போல் கிருஷ்ணனின் பிறந்தநாளையும் மக்கள் அதே அன்போடும் சந்தோஷத்தோடும் கொண்டாடுகின்றனர்

குழந்தைகளுக்கு கிருஷ்ணனைப் போல வேடம்

கிருஷ்ணன் குழந்தையில் செய்த குறும்புத்தனங்களை எல்லாம் மக்கள் மிகவும் ரசிப்பதுண்டு. அந்த மாதிரி தன்னுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணன் போல வேடமிட்டு அலங்காரம் செய்து பார்த்து மகிழ்வதும் உண்டு.

 பள்ளிகளிலும் கலைக்கூடங்களிலும், பாட்டு நாட்டியம் போன்ற கலைகளை கற்பிக்கும் இடங்களிலும் கிருஷ்ண ஜெயந்தியை தன் மாணவர்களுடன் ஆசிரியர்கள் சேர்ந்து விமர்சியாக கொண்டாடுவதும் உண்டு. இந்த நிகழ்ச்சியின் பொழுது குழந்தைகளுக்கு கிருஷ்ணனைப் போல வேடமிட்டு தலையில் மயில் தோகையினால் ஆன கிரீடங்களை அணிவித்து கையில் புல்லாங்குழல் கொடுத்து ரசிப்பது உண்டு.

ஆண் குழந்தை பெண் குழந்தை என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா குழந்தைகளுக்குமே கிருஷ்ணனைப் போல் அலங்கரித்து மகிழ்வார்கள். சிலர் கிருஷ்ணன் கரிய நிறத்தில் இருப்பார் என்பதற்காக குழந்தைகளுக்கு நீல நிறத்தில் வர்ணம் பூசி கிரீடம் வைத்து அதில் மயில் தோகை செருகி, கையில் புல்லாங்குழல் கொடுத்து கண்களுக்கு மையிட்டு கை கால் விரல்களில் மருதாணி தீட்டி அலங்காரம் செய்து ரசிப்பார்கள்.

ஒரு சிலர் ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணனை போலவும் பெண் குழந்தைகளுக்கு ராதையைப் போன்று அலங்காரம் செய்து புகைப்படம் எடுத்து மகிழ்வார்கள்.

கிருஷ்ணர் ஏன் மயில் தோகையை அணிகிறார் என்பதற்கு ஒரு சுவாரசியமான கதை உண்டு. கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிக்கும் பொழுது மனிதர்கள் மட்டுமின்றி காடுகளில் இருந்த மிருகங்களும் பறவைகளும் மாடு கன்றுகளும் மெய்மறந்து ரசித்ததாக கூறப்படுவதுண்டு.

அவ்வாறு மயில்கள் கிருஷ்ணனுடைய புல்லாங்குழலை கேட்டு தோகை விரித்து நடனம் ஆடும் பொழுது அவை உணர்ச்சி மிகுதியால் தங்களுடைய தோகையை கிருஷ்ணரின் காலடியில் சமர்ப்பித்ததாகவும் அதை அன்போடு ஏற்றுக்கொண்டு அந்த தோகையை தன் தலையில் அவர் சூடிக் கொண்டதாகவும்  கூறப்படுவதுண்டு. 

இன்று குழந்தைகள் மகிழும்  கிருஷ்ண ஜெயந்தி! | Krishna Jayanti Is Celebrated With A Bang

 கிருஷ்ணன் வெண்ணெய் பால் பானைகளை உடைத்து அதிலிருந்த வெண்ணெயை சாப்பிட்டு மகிழ்ந்ததாக  புராண கதைகள்  கூறுகின்றன.

வீடுகளிலும் கோயில்களிலும் பள்ளிக்கூடங்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடும் பொழுது ஒவ்வொரு வீட்டு வாசலில் இருந்தும் பூஜை அறை வரையில் கிருஷ்ணன் பாதம் என்று சிறு குழந்தையின் பாதத்தை வரைந்து மகிழ்வதுண்டு. 

இன்று குழந்தைகள் மகிழும்  கிருஷ்ண ஜெயந்தி! | Krishna Jayanti Is Celebrated With A Bang

கிருஷ்ணர் வாழ்ந்த கோகுலத்தை தத்ரூபமாக பொம்மைகளைக் கொண்டு அலங்காரம் செய்வதுண்டு. மாடு கன்றுகள், சிறு குழந்தைகள், தண்ணீர் எடுத்து செல்லும் பெண்கள், குடத்தில் பால் எடுத்து செல்லும் பெண்கள், விவசாயம் செய்யும் பால் கறக்கும் ஆண்கள், குடிசை வீடுகள், மண் வீடுகள், மரங்கள், ஆறுகள் என்று கோகுலத்தில் கிருஷ்ணன் இருந்தது போல் பொம்மைகளைக் கொண்டு வடிவமைத்து அதன் நடுவில் கிருஷ்ணன் புல்லாங்குழலுடன் இருப்பது போன்ற பொம்மையை வைத்து அலங்காரம் செய்து குழந்தைகளுக்கு கிருஷ்ணனின் கதையை கூறி மகிழ்வார்கள்.

கிருஷ்ண ஜெயந்தியின் பொழுது லட்டு, மைசூர் பாகு, குலாப் ஜாமுன், அல்வா, ஜாங்கிரி போன்ற இனிப்பு வகைகளையும், முறுக்கு, சீடை, தட்டை, மிக்சர், ஓமப்பொடி போன்ற கார நொறுக்குகளையும் வீட்டில் செய்வர்.

அதனுடன் அவல் வெண்ணெய் மற்றும் பழங்களைக் கொண்டு கிருஷ்ணனின் படத்தின் முன் படையல் இட்டு குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடும் பழக்கமும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் இடம்பெறும் முக்கிய நிகழ்வாகும்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed