வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகியுள்ள இந் நாட்களில் ஆலயத்தில் நடைபெறும் சமய வழிபாடுகளில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.
பக்தர்களின் பாதுகாப்புக் கருதி, பக்தர்கள் சிவில் உடைகளை அணிந்து பணியில் ஈடுபட நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பக்தர்களின் பணம் மற்றும் தங்கம் காணாமல் போனமை குறித்து தெரிவிக்க காவல்துறையின் விஷேட பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வருடங்களில் நல்லூர் கோவில் பூஜைகளில் பங்குபற்றிய பக்தர்களின் பணப்பைகள் மற்றும் தங்க நகைகள் காணாமற்போயிருப்பதனால், பக்தர்கள் தங்கம் அணிவதை தவிர்க்குமாறும், அதிகளவான பணத்தை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் யாழ். பொலிஸார் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் ஓகஸ்ட் 2ஆம் திகதி ஆரம்பமாகி சுமார் 25 நாட்கள் நடைபெறுவதுடன் உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டிலிருந்தும் இந்துப் பக்தர்கள் உட்பட இலட்சக்கணக்கான மக்கள் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.