• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முன்னோரைப் போற்றும் ஆடி அமாவாசை விரதம் இன்று

Juli 28, 2022

ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது அனைவருக்கும் தெரியும். தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாட்டிற்கு முக்கியமான நாள்.ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார்.கடகம், சந்திரனின் ஆட்சிபெற்ற வீடு. சூரியன் சிவ அம்சம், ஆடி அமாவாசையின் போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது. ஆகவேதான், ஆடி அமாவாசை விரத வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கூறப்பட்டுள்ளது.

அமாவாசை என்பது மிகவும் சிறந்த நாள். 

அமாவாசை என்பது முழுமை பெற்ற நாள். எனவே, நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும் தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம் என்று கூறுவார்கள். நம் முன்னோர்களுக்கு இன்றைய தினம் எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது.


ஆடி அமாவாசை தர்ப்பணம் 

ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்

 நம்முடன் தங்கியிருக்கும் முன்னோர்கள்
 
நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் புரட்டாசி மகாளாய அமாவாசை நாளாகும். அன்றைய தினமும் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. நம்முடன் வந்து ஆறு மாத காலம் தங்கியிருந்த முன்னோர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும். 

கடக ராசியில் சூரியன் சந்திரன் 

ஆடி அமாவாசை நாளில் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் தாய் காரகன் சந்திரன் தந்தை காரகன் சூரியனுடன் இணைந்திருக்கிறார். சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரன் தேய்பிறை நிலையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நிலைக்கு செல்லும் நாள்.
 
முன்னோர்கள் மகிழ்ச்சி
 
அமாவாசை தினத்தில் முன்னோர்களையும் தாய், தந்தையர்களையும் யார் வழிபடுகிறார்களோ, அவர்களின் பிள்ளைகளுக்கும் தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். அமாவாசை நாளில்தான் சந்திரன் சந்தோஷம் அடைகிறாராம். மனோகாரகன் சந்திரன் சந்தோஷமடைந்தால் நம்முடைய மனதும் சந்தோஷம் அடையும். மகிழ்ச்சியான மனதுடன் நாம் செய்யும் செயல்கள் எல்லாமே நிச்சயம் வெற்றி பெறும். சந்திரன் மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள் நம் பித்ருக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்பதற்காகவே அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணத்துக்கு உரிய நாளாக கூறியிருக்கிறார்கள்.
 
முன்னோர்களை வரவேற்போம்

முன்னோர்களுக்கு நாம் செய்யக் கூடியதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். அமாவாசை தினத்தில் நம்முடைய வீட்டினை சுத்தம் செய்து வீடுகளில் விளக்கேற்றி நம்மை காண வரும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்பதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள்

எள் தானம் 

எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். திலம் என்றால் விஷ்ணோர் அம்ச சமுத்பவ:‘ என்று பொருள். விஷ்ணுவிலிருந்து விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள். திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. 

பித்ருசாப நிவர்த்தி 

அமாவாசை நாளில் ஆடை தானம் செய்வதால் வாழ்வில் வேண்டிய பலன் உண்டாகும். புதிய ஆடைகளை தானம் செய்வதால் ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். உங்கள் பணியில் வரும் தடைகள் அனைத்தும் நீங்கும். பசு தானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பித்ருசாப தோஷங்கள் விலகும். எந்த ஒரு சுப திதியிலும் பசுவை தானம் செய்வதால் பித்ருக்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. 

அன்னதானம் முக்கியம் 

நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் அமாவாசை நாளில் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் சகல விதநோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்ட பின்னர் ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் அன்னதானம் கொடுப்பது சிறப்பு. அமாவாசை நாளில் உணவின்றி தவிப்பவர்கள்,ஏழைகள், பசியோடு இருப்பவர்களைத் தேடிச்சென்று தானம் கொடுங்கள். நம்முடைய வழிபாடும், தானமும் உள்ளன்போடு இருந்தால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed