இத்தாலியில் கொளுத்தும் வெப்பம் காரணமாக அங்குள்ள 16 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடும் வெப்ப அலை காரணமாக பற்றியெரியும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
இத்தாலியின் பிரபலமான மிலன் நகரில் எதிர்வரும் நாட்களில் 40 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் பதிவாகலாம் எனவும், தெற்கில் அமைந்துள்ள போலோக்னா மற்றும் தலைநகர் ரோமில் 39 டிகிரி வரையில் வெப்பம் பதிவாகலாம் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, புளோரன்ஸ், ஜெனோவா, டுரின் மற்றும் வெரோனா உள்ளிட்ட நகரங்களுக்கும் வெப்ப அலை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாவியா நகரில் அதி உச்சமாக 39.6 டிகிரி வரையில் வெப்பம் பதிவாகியுள்ளது. மே, ஜூன் மற்றும் ஜூலை என தொடர்ந்து மூன்று மாதங்களாக சராசரியை விட குறைந்தது இரண்டு முதல் மூன்று டிகிரி அதிகமாக உள்ளது, மேலும் இந்த போக்கு ஆகஸ்ட் ஆரம்பம் வரை தொடரும் என்றே அதிகாரிகள் கணித்துள்ளனர்.
வியாழக்கிழமை 1000 பேர்கள் வரையில் குடியிருப்புகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இத்தாலியில் இந்த ஆண்டு மட்டும் இதுவரையில் 27,571 ஹெக்டேர் தீயில் நாசமாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.