• Fr. Dez. 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தண்ணீர், உணவு இல்லாமல் லாரிக்குள் இருந்து 46 பேர் சடலமாக மீட்பு

Jun. 29, 2022

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சாண்டியாகோவின் புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே நேற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நின்றுகொண்டிருந்தது. மாலை 6 மணியளவில் அப்பகுதிக்கு வந்த நகராட்சி ஊழியர் லாரி அருகே சென்று பார்த்த போது கண்டெய்னருக்குள் இருந்து உதவி கேட்டு அழுகுரல் கேட்டுள்ளது. 

உடனடியாக, இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆள் அரவமற்ற ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் கண்டெய்னரை திறந்து பார்த்தனர். 

அப்போது அந்த கண்டெய்னருக்குள் 50-க்கும் மேற்பட்டோர் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவத்துறையினர் கண்டெய்னரில் இருந்தவர்களை பரிசோதித்ததில் 46 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 4 குழந்தைகள் உள்பட 16 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்த கண்டெய்னர் லாரி மெக்சிகோவில் இருந்து வந்ததும் லாரிக்குள் இருந்த அனைவரும் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் நோக்கத்தோடு வந்த அகதிகள் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கடுமையான வெப்பம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் லாரி கண்டெய்னரில் உயிரிழந்த 46 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. லாரியுடன் இணைக்கப்பட்ட கண்டெய்னர் குளிர்சாதன வசதிகொண்டது என்றும், லாரிக்குள்  குளிர்சாதன வசதி வேலை செய்யவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண்டெய்னருக்குள் போதிய உணவு, குடிநீர் இல்லாததாலும் கடுமையான வெப்பத்தாலும் 46 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டெய்னர் லாரியை ஆள் அரவமற்ற ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்திவிட்டு லாரி டிரைவர் தப்பிச்சென்றுள்ளார். 

இதையடுத்து, லாரி டிரைவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவங்களின்போது உயிரிழப்புகளும் அரங்கேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed