பிரித்தானியாவில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் திருடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை திடீரென அதிகரிக்கப்பட்ட பின்னணியில் இந்த திருட்டுச் சம்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரித்தானியாவில் ஜனவரி முதல் பெட்ரோலுக்கு பணம் செலுத்தாமை 39 வீதம் அதிகரித்துள்ளதாக Forecourt Eye தெரிவித்துள்ளது.
இதில் வாகன ஓட்டிகள் பணம் செலுத்தாமல் செல்வது மற்றும் தங்கள் பணப்பையை மறந்துவிட்டதாகக் கூறும் சம்பவங்களும் உள்ளடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் பெட்ரோல் திருட்டுச் சமபங்கள் மாதம் மாதம் அதிகரித்துள்ளதாக பணம் செலுத்தாதவர்களைக் கண்டுபிடித்து கண்காணிக்கும் டிஜிட்டல் கடன் மீட்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஃபிஷர் தெரிவித்துள்ளது.
இந்த செயற்பாடு யாருக்கும் நல்லதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 19.5 வீதம் அதிகரித்துள்ளதாகவும், இது எரிபொருள் விலை உயர்வுடன் தொடர்புபடுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, மார்ச் மாதத்தில் 4.5 வீதம், ஏப்ரலில் 8 வீதம் மற்றும் மே மாதத்தில் 7 வீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பலர் எரிபொருளுக்குப் பணம் கொடுக்காமல் போகிறார்கள்.
30 பவுண்டுகளுக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு ஓடுபவர்களும் இருக்கிறார்கள். மக்கள் தங்கள் பணப்பையை மறந்துவிடுவதாகக் கூறுவதை நாங்கள் காண்கிறோம். சிலர் அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர் என நிக் ஃபிஷர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் முதல் வாரத்தில், எரிபொருள் பணம் செலுத்தப்படாத சம்பவங்கள் 22 வீதம் அதிகரித்துள்ளதாக பிரிட்டிஷ் ஆயில் செக்யூரிட்டி சிண்டிகேட் (BOSS) தெரிவித்துள்ளது.