கொலைக்களமாகும் பாடசாலைகள்
அமெரிக்காவின் பாடசாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்ற துப்பாக்கிச் சூட்டு வன்முறைகளில் மேலும் ஒரு மோசமான சம்பவம் டெக்ஸாஸ் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள உவால்டே (Uvalde, Texas) என்னும் இடத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்றினுள் இயந்திரத் துப்பாக்கி யுடன் நுழைந்த 19 வயது இளைஞர் ஒருவர் நடத்திய வெறியாட்டத்தில் இரண்டு ஆசிரியர்களும் 19 பள்ளிக் குழந்தைகளும் பலியாகியுள்ளனர்.
பலர் காயமடைந்துள்ளனர்.
சிறுவர்கள் சுடப்பட்ட செய்தி அறிந்த பெற்றோர்கள் பதறியடித்துக் கொண்டு பாடசாலை நோக்கி ஓடிய காட்சிகள் சமூகவலைத் தளங்களில் வெளியாகியுள்ளன. சல்வடோர் ராமோஸ் (Salvador Ramos) என்று பெயர் குறிப்பிடப்படும் அந்த இளைஞர் தனது வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்பாக அங்கு வைத்து முதலில் தனது பேர்த்தியாரைச் சுட்டுத்தள்ளியிருக்கிறார். பின்னர் ஆரம்பப் பள்ளிக்குச் சென்று அங்கு வகுப்பறைகளில் புகுந்து சுட்டுள்ளார். சம்பவம் பற்றி அறிந்த எல்லைப் பொலீஸ் படைக் குழுவினர் பாடசாலைக்கு விரைந்து சென்று அந்த இளைஞனைச் சுட்டுக்கொன்றுள்ளனர். மோதலில் படை வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
அதே நகரில் உள்ள உயர்தரப் பள்ளி ஒன்றின் மாணவனாகிய அந்த இளைஞர் குண்டு துளைக்காத கவச ஆடை அணிந்த நிலையில் கைத்துப்பாக்கி மற்றும் ஒர் இயந்திரத் துப்பாக்கி கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளார். அவ்விரு துப்பாக்கிகளும் அனுமதிப் பத்திரம் பெறப்பட்ட ஆயுதங்கள் என்று கூறப்படுகிறது.
பள்ளியில் வெறியாட்டம் புரிவதற்கு முன்பாகத் தனது இன்ஸ்ரகிராம் தளத்தில் துப்பாக்கிகளுடன் வெளியிட்ட படத்தில் யுவதி ஒருவரைக் குறிப்பட்டுத் தான் புரியப் போகும் செயலை அந்தப் பெண்ணுக்கு உணர்த்தும் விதமாகச் செய்தி பரிமாறியுள்ளார் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கப் பாடசாலைகளில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை இது போன்ற 27 சூட்டுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.கடந்த 2012 இல் கொனெற்றிக்கட் (Connecticut) இல் சண்டி ஹூக் (Sandy Hook) என்ற ஆரம்பப்பாடசாலையில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு நடந்த மிக மோசமான சம்பவம் இதுவே ஆகும். அமெரிக்கா எங்கும் அதிர்வலைகளைஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் துப்பாக்கிக் கட்டுப்பாடுகள் விடயத்தின் மீது மீண்டும் நாட்டின் கவனத்தைக் குவித்துள்ளது.