எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் விலைச்சூத்திரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இறக்குமதி, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகம் மற்றும் வரிகள் ஆகியவற்றில் ஏற்படும் அனைத்து செலவுகளும் விலை திருத்தத்தில் அடங்கும். இலாபங்கள் இதில் கணக்கிடப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
போக்குவரத்து மற்றும் இதர சேவைக் கட்டணங்களை திருத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த சூத்திரம் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் அல்லது மாதந்தோறும் பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச நிறுவனங்களின் தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் இன்று முதல் அரச பணியாளர்கள் வேலைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும், எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கவும் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 82 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 420 ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படவுள்ளதாகவும், ஒக்டெய்ன் 95 ரக பெற்றோலின் விலை 77 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 450 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும், ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 111 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 116 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 445 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.