நாடு முழுவதிலும் உள்ள 3,844 பரீட்சை நிலையங்களில் ஜூன் 1 ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறும.
இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 517,496 பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நடவடிக்கைகளை மேற்பார்வையிட 542 ஒருங்கிணைப்பு மையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
பாதுகாப்பு
பரீட்சை நிலையங்களுக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ஒவ்வொரு பரீட்சை மையத்திலும் ஒரு சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பரீட்சார்த்திகளுக்கு வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை எடுத்துச் செல்லும் போது நடமாடும் பொலிஸ் ரோந்துப் பாதுகாப்பு வழங்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தர பரீட்சை காலத்தில் வீதிகளை மறித்து போராட்டங்களை நடத்த வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
போக்குவரத்து
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை ஊழியர்களை பரீட்சை நிலையங்களுக்கு ஏற்றிச் செல்வதற்கு விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு மாணவர்களின் வசதிக்காக சிசு சரிய பேருந்துகளை அதிகபட்ச திறனில் இயக்குவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் ஊழியர்களின் வசதிக்காக போதியளவு இலங்கை போக்குவரத்து சபை பஸ்களை சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பரீட்சை அட்டவணை அனைத்து டிப்போ முகாமையாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அதன்படி, பரீட்சை அட்டவணையின் அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு மேலதிக பஸ்கள் சேர்க்கப்படும்.
பரீட்சை காலத்தில் தனியார் பேருந்துகள் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் மாணவர்களும் பெற்றோர்களும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பரீட்சை காலங்களில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் எனவும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பரீட்சை காலத்தில் வழமையான புகையிரத அட்டவணையின்படி ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. தற்போது அதிகமானோர் ரயில்களை பயன்படுத்துவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பரீட்சை நிலையங்களுக்கு முன்னதாகவே செல்லுமாறு ரயில்வே பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டண உயர்வு மற்றும் தற்போதைய நிதி நிலைமை காரணமாக, அதிகமான மக்கள் தங்கள் தினசரி பயணத்திற்கு ரயில்களைப் பயன்படுத்துகின்றனர், இதன் விளைவாக ரயில்கள் நிரம்பியுள்ளன. புதிய நிலைமை குறித்து பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
சிறைக்கைதிகளும் பரீட்சைக்கு தோற்றுகிறார்கள்
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 15 சிறைக் கைதிகள் தோற்றவுள்ளனர்.
இதன்படி, வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள ஒரு கைதியும், மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 4 முன்னாள் போராளிகளான தமிழ் அரசியல் கைதிகளும், வட்டரெக்க திறந்த சிறை முகாமில் உள்ள சுனீதா சிறைச்சாலைப் பள்ளியில் கல்வி கற்கும் 10 சிறார் குற்றவாளிகளும் பரீட்சைக்கு முகம் கொடுக்க உள்ளனர்.
சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏகநாயக்க, அனைத்து கைதிகளும் மெகசின் சிறைச்சாலையிலும், வட்டரெக்க சுனீதா சிறைச்சாலைப் பாடசாலையிலும் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் என்றார்.