• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவை உலுக்கிய புயல்!! பிரதமர் அனுதாபச் செய்தி

Mai 23, 2022

கனடாவின் ஒன்ராரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களை தாக்கிய புயல் காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 09 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 இலட்சம் பேருக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் ஒன்ராரியோ மாகாண முதலமைச்சரான டக் போர்ட் ஆகியோர் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

புயல்காற்று காரணமாக பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ள அதேவேளை, பலரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதாகவும் பலருக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தமது சிந்தனை இருப்பதாகவும், மின் இணைப்புகளை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்காக பணியாற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணம் முழுவதும் களைப்பின்றி பணியாற்றி சுத்தமாக்கும் மற்றும் மின்விநியோகத்தை சீர்செய்யும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக மாகாண முதலமைச்சரான டக் போர்ட் கூறியுள்ளார்.

ஒன்ராரியோவின் தென் பிராந்தியம் மற்றும் கியூபெக்கை தாக்கிய புயல்காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்வடைந்துள்ளது.

எனினும் புயல்காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை இதுவரை தெரியவரவில்லை.

மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்துவீழ்ந்ததால் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

சுற்றுலா மேற்கொண்டிருந்தவர்களும் கோல்ஃப் விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தவர்களும் அனர்த்தங்களில் சிக்கியுள்ளதாக காவல்துறை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

Uxbridge, ரொறண்டோவின் வட பகுதி, Clarence-Rockland மற்றும் ரொறண்டோவின் கிழக்கு பகுதியில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  

கனடாவை உலுக்கிய பேரிடர்!! பிரதமர் அனுதாபச் செய்தி
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed