கனேடிய மாணவர்களினால் மிகவும் நேசிக்கப்படும் இலங்கைத் தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு கற்பிப்பதற்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது.
பிரபல இரசயானவியல் ஆசிரியரான திரு திருக்குமாரன் என்ற இலங்கைத் தமிழர் ஒருவருக்கு மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை.
கனடாவில் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
ஒன்றாரியோ ஆசிரியர் கல்லூரியினால் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றது. திருக்குமாரன் வெஸ்ட் ஹில் கல்லூரியில் கடந்த சில மாதங்களாக தன்னார்வ அடிப்படையில் சம்பளமின்றி இரசாயனவியல் கற்பித்து வந்தார்.
எனினும், அவருக்கு தொடர்ந்தும் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதிப்பத்திரத்தை ஒன்றாரியோ ஆசிரியர் கல்லூரி வழங்கவில்லை.
இலங்கையைச் சேர்ந்த திருக்குமாரன் கனடாவின் நிரந்தர வதிவிடத்தைக் கொண்டவர்.
இலங்கையில் பட்டமொன்றை பூர்த்தி செய்துள்ள திருக்குமாரன், ஒன்றாரியோ தொழில்நுட்ப கல்லூரியிலும் இளங்கலை பட்டமொன்றை பூர்த்தி செய்துள்ளார்.
தம்முடன் பட்டத்தை பூர்த்தி செய்த பலருக்கு கற்பிப்பதற்கான அனுமதிபத்திரம் வழங்கப்பட்ட போதிலும் தமக்கு வழங்கப்படவில்லை என திருக்குமாரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றின் பட்டச் சான்றிதழ் திருக்குமாரனுக்கு கிடையாது என்ற அடிடிப்படையில் அவருக்கு அனுமதிப்பத்திரம் மறுக்கப்பட்டுள்ளது. இவர் அவுஸ்திரேலியாவிலும் இரசாயனவியலாளராகவும், ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்