• Fr.. Dez. 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தமிழ்நாட்டில் ஆசிரியர்களை தாக்கும் மாணவர்கள்.

Mai 6, 2022

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ஆசிரியரை ஆபாசமாக பேசி தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் சம்பவத்தை பொறுத்தவரை மாதனூரில் தாவரவியல் முதுகலை ஆசிரியர் சஞ்சய் என்பவர் ரெகார்ட் நோட்டை சமர்ப்பிக்கும்படி மாணவர்களிடம் கூறியுள்ளார்.

அதனை சற்றும் பொருட்படுத்தாத ஒரு மாணவன், வகுப்பறையில் பாய் விரித்து படுத்துள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட ஆசிரியரை, மாரியும் மற்றொரு மாணவனும் அடிக்கப் பாய்ந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட 3 மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து சேலம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒழுங்காக முடிவெட்டி வர ஆசிரியர் அறிவுறுத்தியதால் கோபமடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் அவரை பீர் பாட்டிலால் குத்த முயன்ற சம்பவம் பள்ளி வட்டாரத்தில் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதேபோல தேனி தேவதானப்பட்டியில் புத்தகம் கொண்டுவராமல் பள்ளிக்கு வந்த மாணவனை ஆசிரியர் கண்டிக்க, கத்தியை காட்டி ஆசிரியரை மாணவன் மிரட்டிய சம்பவமும் நடந்தேறியது. அதே மாவட்டத்தில் தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புத்தகம் கொண்டு வராத மாணவரை நோக்கி ஆசிரியர் சற்று கோபமாக கேட்க அதற்கு அந்த மாணவர் ஆசிரியரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த சனிக்கிழமை கூட, வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இரும்பு மேசையை மாணவர்கள் உடைத்தது தொடர்பாக ஆர்டிஓ கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்பட்டது. கன்னியாகுமரியில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல சென்னை,காஞ்சிபுரம்,திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியர் மாணவர் மோதல் என்பது நடந்தேறியுள்ளது.

இதுபோன்ற மாணவர்களின் ஒழுங்கீன நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், பள்ளிக்கு வருவதற்கே அச்சமாக இருப்பதாக பல ஆசிரியர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இதுபோன்ற சம்பவங்களுக்கு அதில் ஈடுபடும் மாணவர்கள் மட்டும் பொறுப்பல்ல. அவர்களின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது சமூகம் மற்றும் அரசின் பொறுப்பு என்பதும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

இச்சம்பவங்கள் அனைத்தும் அரசுப் பள்ளிகளில்தான் நடக்கிறது என்பதால், அரசுப்பள்ளி மீதான அச்சம் உருவாகும் அபாயகராமான சூழலையும் இது ஏற்படுத்துகிறது. கொரோனா காலத்துக்குப் பின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்தது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் எண்ணிக்கை – 2.96 லட்சம் என்றிருக்க, அங்கு பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை – 1.20 கோடி என்றும், அவர்களில் ஆண் – 40% பெண் – 60% என்றும் உள்ளது. இவர்களில் கொரோனாவிற்கு பின் 5.50 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் புதிதாக சேர்ந்திருந்தனர். இந்த 5.50 லட்சம் பேரில் 2,000 பேர் சிபிஎஸ்சி-ல் பயின்ற மாணவர்கள்.

போலவே 40-50% பேர் மெட்ரிக்குலேசனில் பயின்று வந்த மாணவர்கள். இப்படி கொத்து கொத்தாக அரசுப்பள்ளி நோக்கி தங்கள் பிள்ளைகளை திருப்பிய பெற்றோருக்கு, தற்போது இதுபோன்ற நடவடிக்கைகள் அச்சத்தையே ஏற்படுத்துகின்றது என்பது இங்கு நாம் கவனிக்கத்தக்கது.

மாணவர்களின் இந்த ஒழுங்கீன போக்கை சரிசெய்வது குறித்து கல்வி உளவியலாளர் சரண்யா நம்மிடையே நியூஸ் 360 நிகழ்ச்சியில் பேசினோம். அப்போது அவர், “மாணவர்களை எப்படி கண்டிப்பது என ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர் நடவடிக்கைக்கு சில பெற்றோர்களே காரணமாக உள்ளனர். இன்றைய குழந்தைகளின் குறும்பு மிக அதிகமாக உள்ளது. தாங்கள் செய்வது தவறு என்ற உணர்வே குழந்தைகளுக்கு இல்லை.

தவறு செய்த பின்னும் அதை உணர்வதில்லை. இதை எதிர்க்கும் ஆசிரியர்களை, அதிலும் அதிக கண்டிப்புடன் இருக்கும் ஆசிரியர்களை அம்மாணவர்கள் வெறுக்கின்றனர். வீட்டிலும் சூழல் மாறவேண்டியுள்ளது”

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed