வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்தப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை (12.4.2022) வெகுசிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை-05 மணிக்குத் திருப்பள்ளி எழுச்சி, உஷக் காலப் பூசை என்பன இடம்பெற்றுக் காலை-06 மணிக்கு ஸ்நபன அபிஷேகம், வழுந்துப் பானை வைத்தல் நிகழ்வு என்பன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை, அயற் கிராமங்கள் மற்றும் யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த அடியவர்கள் எனப் பல நூற்றுக்கணக்கானோர் ஆலயச் சூழலில் பொங்கல் பொங்கியும், மோதகம் அவித்தும், வடை சுட்டும் ஆலய இராஜகோபுரத்தின் முன்பாகப் படையல் செய்து பக்திபூர்வமாக வழிபட்டனர்.இதில் பலரும் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்றிருந்தனர். சம நேரத்தில் துர்க்கை அம்பாள் ஆலயத்தில் வழிபாடுகளும் இடம்பெற்றது. பொங்கல் வழிபாடுகள் வழமை போன்று மாலை வரை இடம்பெற்றது.
பிற்பகல்-05 மணிக்கு வசந்தமண்டபப் பூசை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்பாள் அலங்கார நாயகியாக உள்வீதி எழுந்தருளி வலம் வந்தாள். பிற்பகல்-05.45 மணிக்கு அம்பாளின் வெளி வீதி உலாப் பவனி ஆரம்பமானது.
மந்த மாருதமான மாலை வேளையில் துர்க்கை அம்பாள் அடியவர்கள் புடை சூழ சிங்க வாகனத்தில் ஒய்யாரமாக வீற்றிருந்து மங்கள வாத்திய இசை முழக்கத்துடன் வெளி வீதி உலா வந்த காட்சி அற்புதமானது.
இதேவேளை, இவ்வாலயத்தில் பன்னெடும் காலமாக பங்குனி மாதத்தில் வருகின்ற இறுதிச் செவ்வாய்க்கிழமை அன்று வருடாந்தப் பொங்கல் விழா சிறப்புற இடம்பெற்று வருவதாகத் துர்க்காதேவி ஆலயத்தின் தலைவரும், பிரபல சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.