• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சடலமாக மீட்கப்பட்ட காணாமல்போன தமிழ் வர்த்தகர்

Apr. 5, 2022

ஒரு வருடத்துக்கு முன்னர் காணாமல் போன வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகரின் சடலம் நேற்று (4) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனமடுவ- வடுவத்தேவ குளத்துக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

58 வயதான அண்ணாமலை பழனி என்ற குறித்த வர்த்தகர், 15 வருடங்களாக இத்தாலியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்ததுடன் , இத்தாலியில் ஆடைத் தொழிற்சாலையொன்றையும் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த வருடம் மே மாதம் 6ஆம் திகதி இலங்கைக்கு வருகைத் தந்த இவர், ஆனமடுவ பிரதேசத்தில் கொள்வனவு செய்திருந்த காணியை பார்வையிட சென்ற வேளை காணாமல் போனதாக அவரது மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய வர்த்தகருடன் நெருங்கி பழகிய ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து உயிரிழந்த நபரின் ஏ.டி.எம் அட்டை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வர்த்தகர் காணாமல் போய் 14 நாட்களுக்குள் குறித்த ஏ.டி.எம் அட்டையிலிருந்து 14 இலட்சம் ரூபாய் பணம் மீளப் பெறப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளது.

கைதான சந்தேகநபர் இதற்கு முன்னரும் கைதுசெய்யப்பட்டு ஆனமடுவ நீதிமன்றில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்த போதே, வர்த்தகர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.   

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed