• Fr. Dez. 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஏழாலைப் பண்ணையில் கோழிகளும், ஆடுகளும் கொள்ளை

Apr. 5, 2022

யாழ்.ஏழாலை வடக்கு காளி கோயிலடியில் அமைந்துள்ள பண்ணைக்குள் இரவு வேளை உள்நுழைந்த கொள்ளையர் குழு சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான கோழிகளையும், ஆடுகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

மேற்படி பண்ணையின் உரிமையாளர் புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வாழ்ந்து வரும் நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பண்ணையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பண்ணைப் பொறுப்பாளர் இரவு தனது வீட்டிற்குச் சென்றுவிட்டு அடுத்தநாள் காலையில் மீண்டும் சென்று பார்த்த போது பண்ணையில் பெரும் திருட்டு இடம்பெற்றுள்ளமை தெரியவந்தது.

பண்ணைக்குள் புகுந்த கொள்ளையர்கள் குழு அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவிக் கமரா ஒன்றின் வயர் இணைப்பைத் துண்டித்தும், சேதப்படுத்தியும், மற்றைய சிசிரிவிக் கமராவை மேலே பார்க்குமாறு திருப்பியும் விட்டு அங்கு கட்டப்பட்டிருந்த சுமார்-35 ஆயிரம் ரூபா பெறுமதியான 12 நல்லின ஆடுகளையும், கோழிக் கூடு பிரிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பாக விடப்பட்டிருந்த ஒவ்வொன்றும் தலா எட்டாயிரம் ரூபா பெறுமதியான 50 கடக்நாத் கோழிகளையும், தலா-1500 ரூபா பெறுமதியான இரண்டு கின்னிக்கோழிகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பண்ணைப் பொறுப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணைகள் மேற்கொண்டனர்.

இதேவேளை, குடியிருப்புக்கள் பல அமைந்துள்ள பகுதியிலேயே மேற்படி கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed