சுவிஸ் போராளிகள் உக்ரைன் போரில் கலந்துகொள்ள சென்றால் சிரை தண்டனை விதிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை 3 சுவிஸ் குடிமக்கள் உட்பட சுமார் 35 தன்னார்வலர்கள், உக்ரைனில் போர் முயற்சியில் சேருவது குறித்து சுவிட்சர்லாந்தில் உள்ள உக்ரேனிய தூதரகத்தை தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சுவிஸ் விதிகளின்படி வெளிநாட்டுப் போரில் ஈடுபடும் சுவிஸ் குடிமக்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
ரஷ்ய படையெடுப்புக்குப்பின், உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelensky, உக்ரைனுக்காக போரில் கலந்துகொள்ள வெளிநாட்டு தன்னார்வலர்களின் ஆதரவை கோரினார். 16,000 வெளிநாட்டவர்கள் நிறைந்த வலுவான பட்டாலியன் பற்றி பேசிய அவர், போராட தயாராக இருக்கும் தன்னார்வலர்கள் உக்ரேனிய தூதரகங்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, பிரித்தானியா, கனடா, ஜப்பான், நார்வே, பெல்ஜியம் மற்றும் அமெரிக்காவில் உள்ள பலர் பதிவு செய்து உக்ரைனுக்குச் செல்ல தொடங்கினர்.
ஆனால், சுவிஸ் குடிமக்கள் வெளிநாட்டு மோதல்களில் சண்டையிடுவது சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
சுவிஸ் இராணுவ நீதித் துறையின் செய்தித் தொடர்பாளர் ஃப்ளோரியன் மென்சி, இது குறித்து கூறுகையில், ஆபத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஜெலென்ஸ்கியின் அழைப்புக்கு பதிலளிக்கும் சுவிஸ் குடிமக்கள் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறுவார்கள்.
மருத்துவ குழு அல்லது ஆதரவு குழுவில் ஈடுபடுகிறார்களா அல்லது போரில் ஈடுபடுகிறார்களா என்பது முக்கியமல்ல. அனைத்து சுவிஸ் குடிமக்களுக்கும் வெளிநாட்டு இராணுவத்தில் பணியாற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளது, என்றார்.
2014 முதல் உக்ரைனில் சண்டையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏற்கனவே மூன்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.