• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி.

Feb 28, 2022

சிவபெருமானுக்கு உகந்த மிக முக்கியமான விரதங்களில் இந்த சிவராத்திரியும் ஒன்று. இந்த வருடம் சிவராத்திரி மார்ச் 1 ஆம் தேதி வரவிருக்கின்றது. அதாவது நாளைய தினம். அற்புதம் வாய்ந்த இந்த நன்னாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து முறையாக எப்படி பூஜை செய்வது என்பதைப் பற்றிய விரிவான தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. மகாசிவராத்திரி அன்று தூய்மையான மனதோடு, நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு, மனதார ஒரு முறை ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்தாலே போதும். உங்களுடைய பிறவிப் பலனை நீங்கள் பெறலாம்

விரதம் இருக்கும் முறை: எப்போதும் போலதான் விரத நாட்கள் என்றால் காலையிலேயே எழுந்து சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து விட வேண்டும். சிவராத்திரி தினமான மார்ச் 1ஆம் தேதி அன்று காலை 6 மணிக்கு முன்பாக குளித்துவிட்டு, உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, நெற்றி நிறைய விபூதி பூசிக் கொண்டு ‘ஓம் நமசிவாய’ ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை உச்சரித்து விட்டு உங்களுடைய விரதத்தை தொடங்குங்கள். –

1 ஆம் தேதி காலை ஆரம்பிக்கக் கூடிய விரதமானது அடுத்த நாள் காலை, அதாவது 2 ம் தேதி காலை சிவபெருமானுக்கு, நான்காம் கால பூஜை நிறைவடையும்போது தான் முடிவடையும்.

1 ம் தேதி காலையில் இருந்து, அடுத்த நாள் காலை 6 மணி வரை எதுவுமே சாப்பிடாமல் உபவாசம் இருந்து, நான்காம் கால பூஜை நிறைவடையும் போது சிவபெருமானுக்கு கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இடைப்பட்ட காலத்தில் நிறைய தண்ணீர் மட்டும் பருகிக் கொள்ளலாம். ஆனால் எல்லோருடைய உடல்நிலையும் இதற்கு ஒத்துழைக்காது. அவரவர் உடல்நிலையைப் பொறுத்து உங்களுடைய விரதத்தை மேற்கொள்ளலாம். அதன்மூலம் எந்த தெய்வ குற்றமும் ஏற்படாது. சிவராத்திரி என்றாலே தூங்காமல் கண் விழிக்க வேண்டும் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும்.

முறைப்படி தூங்காமல் எப்படி கண் விழிப்பது. மார்ச் மாதம் 1-ஆம் தேதி காலை விரதத்தை தொடங்கி விட்டீர்களா? நீங்கள் தூங்கவே கூடாது. மார்ச் மாதம் 2 ம் தேதி மாலை 6 மணிக்கு சிவபெருமானை தரிசனம் செய்து விட்டு அதன் பின்புதான் உங்களுடைய தூக்கத்தை தொடர வேண்டும். இதுவே கண் விழிக்கும் சரியான முறை. (இரவு கண் விழிக்கும்போது சிவபெருமானை நினைத்து சிவபுராணம், தேவாரம், திருவாசகம், இப்படிப்பட்ட புத்தகங்களை படிக்கலாம். இந்த பாடல்களை ஒலிக்கவிட்டு காதால் கேட்கலாம். சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்கள் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களை அறவே தவிர்ப்பது நல்லது.) –

பூஜை செய்யும் முறை: சிவலிங்கம் வீட்டில் வைத்திருப்பவர்கள் சிவராத்திரி அன்று இரவு, கட்டாயம் சிவனுக்கு ஒரு கால பூஜையாவது செய்ய வேண்டும். சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து கட்டாயம் பூஜை செய்தே ஆக வேண்டும். சிவராத்திரி நான்கு கால பூஜை நேரம் என்பது இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.

இந்த வருடம் மார்ச் 1ஆம் தேதி இரவு ஏழு முப்பது மணிக்கு பிறகு, உங்கள் வீட்டில் இருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வில்வ இலையால் அர்ச்சனை செய்து உங்களால் முடிந்த நிவேதனத்தை வைத்து பூஜை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

முதல் கால பூஜை தொடங்கும் நேரம் இரவே 7:30 மணி,

இரண்டாம் கால பூஜை தொடங்கும் நேரம் இரவு 10.30,

மூன்றாம் கால பூஜை தொடங்கும் நேரம் இரவு 12.00 மணி,

நான்காம் கால பூஜை தொடங்கும் நேரம் அதிகாலை 4.30 மணி. முதல் கால பூஜையை இரவு 7.30 மணியிலிருந்து 10.30 மணிக்கு முன்பாக எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம்.

இதேபோல்தான் அடுத்தடுத்து வரும் நேரத்தையும் நாம் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். இந்த நான்கு காலத்தில் குறிப்பாக இரவு 11.30 மணியிலிருந்து 1.00 மணி வரை சிவபெருமானை வழிபாடு செய்வது மிகமிக சிறப்பான காலமாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில்தான் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமானை வழிபட கூடிய நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களால் முடிந்தால் சிவராத்திரியன்று இரவு இந்த நேரத்தை மட்டும் தவறவிடாதீர்கள். இதைதான் ‘லிங்கோத்பவ காலம்’ என்று சொல்வார்கள். வீட்டில் லிங்கம் இல்லாதவர்கள் சிவபெருமானின் திருவுருவப் படம், அண்ணாமலை ஈஸ்வரின் படம் வைத்திருப்பவர்கள், இரவு உங்கள் பூஜை அறையில், அந்த திருவுருவ படத்திற்கு முன்பாக அமர்ந்து அந்த திருவுருவப்படத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, உங்களுக்குத் தெரிந்த தேவாரம் திருவாசகம் சிவபெருமானின் மந்திரங்கள் இவற்றை உச்சரித்தோ அல்லது காதால் கேட்டோம் இரவு முழுவதும் கண் விழிப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

இது அல்லாமல் கோவிலுக்கு சென்று சிவபெருமானின் அபிஷேகத்தை பார்த்து கண் விழித்தும் இரவு பொழுதை கழிக்கலாம். கண் விழிக்க முடியாதவர்கள், விரதம் இருக்க முடியாதவர்கள், எந்த கவலையும் பட தேவை கிடையாது. சிவபெருமானே உள்ளன்போடு மனம் உருகி ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தாலே போதும். அதற்கு உண்டான பலன் நிச்சயம் நமக்கு கிடைக்கும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed