மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு திருக்கேதீச்சரம் திருத்தலப் பாதயாத்திரிகள் சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை நேற்றுப் புதன்கிழமை(23.02.2022) முற்பகல்-10 மணிக்கு செல்வச்சந்நிதி முருகன் ஆலயச் சூழலிலிருந்து ஆரம்பமானது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் நேற்றுக் காலை-09 மணிக்கு இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் பாதயாத்திரைக்கு எடுத்துச் செல்லும் வேல்,சூலம் என்பன வைத்து விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பாத யாத்திரை சந்நிதியான் ஆச்சிரமத்தைச் சென்றடைந்தது. அங்கும் வழிபாட்டிடத்தில் வேல், சூலம் என்பன வைக்கப்பட்டுப் வழிபாடு இடம்பெற்றது.
பின்னர் பாதயாத்திரைக் குழுவினர் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகி செ.மோகனதாஸ் சுவாமிகளிடம் ஆசிகள் பெற்று முற்பகல்-10 மணியளவில் சிவலிங்கப் பெருமானுடன் கூடிய அலங்கரிக்கப்பட்ட ஊர்தியுடன் தமது பாதயாத்திரையை ஆரம்பித்தனர்.
குறித்த பாதயாத்திரைக் குழுவினர் பருத்தித்துறை வீதி ஊடாகப் பல்வேறு இந்து ஆலயங்களைத் தரிசித்து நேற்றிரவு நல்லூரைச் சென்றடைந்தனர்.
நல்லை ஆதீனத்தில் நேற்றிரவு இரவு தங்கியிருந்த பாதயாத்திரைக் குழுவினர் இன்று காலை நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பஜனை நிகழ்வைத் தொடர்ந்து திருக்கேதீச்சரம் நோக்கிய தமது பாதயாத்திரையை மீண்டும் ஆரம்பித்துத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்தப் பாதயாத்திரையில் மேலும் சில அடியவர்கள் இன்றையதினம் இணைந்து கொண்டுள்ளனர்.
குறித்த பாதயாத்திரைக் குழுவினர் எதிர்வரும்-1 ஆம் திகதி மகாசிவராத்திரி தினத்தன்று காலை திருக்கேதீச்சரம் ஆலயத்தைச் சென்றடையவுள்ளனர். மேற்படி பாதயாத்திரையில் ஆர்வமுள்ள அடியவர்கள் அனைவரும் இணைந்து கொள்ள முடியும்.
இணைந்து கொள்ள விரும்பும் அடியவர்கள் கொரோனாத் தடுப்பூசி அட்டையைத் தம்முடன் தவறாது எடுத்து வருமாறும் திருக்கேதீச்சரம் திருத்தலப் பாதயாத்திரிகள் சேவா சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சைவப்புலவர் செ.கந்தசத்தியதாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.