• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியா இனி இந்த விசா வழங்காது. வெளியாகும் அறிவிப்பு.

Feb 17, 2022

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும், ‘golden visa’ என்று அழைக்கப்படும், Tier 1 (investor) விசா வழங்குவதை நிறுத்திக்கொள்ள பிரித்தானியா முடிவு செய்துள்ளது.

குறைந்தபட்சம் 2 மில்லியன் பவுண்டுகள் செலவிடுபவர்களுக்கு வாழிட உரிமம் வழங்கும் இந்த தங்க விசா (golden visa) திட்டத்தை ரத்து செய்வது குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்பதை அரசு தரப்பைச் சேர்ந்த ஒருவர் உறுதி செய்துள்ளார்.

வெளிநாடுகளில் வாழும் செல்வந்தர்கள் பிரித்தானியாவில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், 2008ஆம் ஆண்டு இந்த தங்க விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது ரஷ்யா உக்ரைன் நாட்டுக்குள் ஊடுருவத் திட்டமிட்டுள்ள நிலையில், ரஷ்யாவுடனான உறவுகளை பிரித்தானியா முறித்துக்கொள்ளவேண்டும் என அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், இந்த தங்க விசா ரத்து குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

தங்க விசா அல்லது The Tier 1 (investor) விசா, பிரித்தானியாவில் 2 மில்லியன் டொலர்களும் அதற்கு அதிகமாகவும் முதலீடு செய்பவர்களுக்கு பிரித்தானியாவில் வாழிட உரிமம் வழங்குவதுடன், அவர்களது குடும்பத்தினரையும் பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள அனுமதியளிக்கிறது.

இந்த தங்க விசா வைத்திருப்பவர்கள், எவ்வளவு சீக்கிரம், எவ்வளவு அதிகம் முதலீடு செய்கிறார்களோ, அவ்வளவு சீக்கிரம் நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்.

2 மில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்பவர்கள் 5 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கலாம், 5 மில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்பவர்கள் 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கலாம், 10 மில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்பவர்கள் 2 ஆண்டுகளுக்குள் நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்

இந்த திட்டம் 2008இல் துவங்கியதைத் தொடர்ந்து, உள்துறை அலுவலகம் இதுவரை 14,516 ரஷ்ய குடிமக்களுக்கு தங்க விசாக்கள் வழங்கியுள்ளது.

இந்த விசா தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தையடுத்து பாதுகாப்பு கருதி விசா வழங்குவதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டாலும், 2020ஆம் ஆண்டு, பிரித்தானியாவில் ரஷ்யாவின் தாக்கம் குறித்த அறிக்கை ஒன்று தொடர்பில், தங்க விசாக்கள் வழங்குவதில் மேலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என நாடாளுமன்ற உளவுத்துறை மற்றும் பாதுகாப்புக் கமிட்டி வாதம் ஒன்றை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed