• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரிட்டனில் பரவும் புதிய வகை காய்ச்சல்.

Feb 16, 2022

பிரிட்டனில் லஸ்ஸா காய்ச்சல் என்ற புதிய வகை வைரஸ் காய்ச்சல் மூன்று பேருக்குத் தொற்றியது கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.

ஆப்பிரிக்க கண்டத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய எபோலா வைரசும் லஸ்ஸா வைரசும் உறவு முறைத் தொடர்புடையவை என்பதால் இந்த தொற்றும் உயிரிழப்பும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளன.

இந்த பச்சிளம் குழந்தை, கடந்த வாரம் லுடன் அன் டன்ஸ்டபிள் மருத்துவமனையில் உயிரிழந்தது. இந்த நோய்த் தொற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரில் இந்த குழந்தையும் ஒன்று.

இதில் இரண்டு பேர் கேம்பிரிட்ஜ் அட்டன்புரூக் மருத்துவமனையில் முதலில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து லண்டன் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டவர்கள். இந்த இரண்டு மருத்துவமனைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இந்த நோயாளிகளின் தொடர்பில் வந்திருக்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், பிரிட்டன் தேசிய சுகாதார சேவையின் கிழக்கு இங்கிலாந்து பிரிவு இதனை ‚பெரிய வட்டார சம்பவம்‘ என்று அறிவித்துள்ளது.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முகமையான ‚உக்சா‘ (UKHSA) லஸ்ஸா காய்ச்சல் மரணம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், தொடர்புத் தேடல் நடவடிக்கைகள் நடப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்த மூவருக்கும் ஏற்பட்ட தொற்று மேற்கு ஆப்பிரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தோடு தொடர்புடையது என்று உக்சா முதன்மை மருத்துவ ஆலோசகர் டாக்டர் சூசன் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை தனிமை நடவடிக்கை

அட்டன்புரூக் மருத்துவமனையை நடத்தும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனை என்.எச்.எஸ். டிரஸ்ட் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய இது தொடர்பான மின்னஞ்சலை பிபிசி பார்த்தது.

„தொடர்பறியும் நடவடிக்கையில் அடையாளம் காணப்பட்ட நமது ஊழியர்கள் 14 நாள்கள் முன்னெச்சரிக்கை தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும்படி கோரப்படுகிறார்கள். நோயாளிகளோடு அவர்கள் 21 நாள்களுக்கு தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் கூறப்படுகிறது“ என்று அந்த மின்னஞ்சல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed