• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அதிகரித்து கொண்டே இருக்கும் அரிசியின் விலை!

Jan 11, 2022

நாடளாவிய ரீதியில் அரிசி வகைகளின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அரசாங்கம் அரிசி விலை கட்டுப்பாட்டில் இருந்து விலகியுள்ளதுடன்,அரிசி வர்த்தகர்கள் அரிசிகளுக்கான விலைகளை நிர்ணயித்து வருகின்றனர்.

இந்நிலையில்,நாட்டின் பல நகரங்களில் அரிசி விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வர்த்தகர்கள் தமக்கு ஏற்ற வகையில் விலைகளை மாறுபட்ட வகையில் உயர்த்தி விற்பனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதும் பல பிரதேசங்களில் நாடு, வெள்ளை பச்சை மற்றும் சிகப்பு பச்சை அரிசிகளின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஒரு கிலோ கிராம் அரிசி 10 ரூபாவுக்கும் 15 ரூபாவுக்கும் இடையிலான விலையில் அதிகரித்துள்ளது.

மேலும் சில பிரதேசங்களில் அரிசி வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. 140 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் நாடு அரிசி தற்போது 165 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி தற்போது 180 ரூபாவுக்கும் மேல் அதிகரித்துள்ளது.

120 முதல் 125 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கிராம் வெள்ளை பச்சை அரிசி 140 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் 110 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கிராம் சிகப்பு பச்சை அரிசி 125 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை தவிர ஒரு கிலோ கிராம் கீரி சம்பா சுமார் 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்,தற்போது ஹட்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் வெள்ளை அரிசி 150 முதல் 160 ரூபாய் வரையிலும், சிவப்பு அரிசி 160 முதல் 170 ரூபாய் வரையிலும், நாட்டு அரிசி 170 முதல் 180 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் வெள்ளை பச்சை அரிசி 150 ரூபாவுக்கும் 160 ரூபாய்க்கும் இடையிலும் சிவப்பு பச்சை அரிசி 160 ரூபாய் முதல் 170க்கு இடையிலும் நாட்டரிசி ஒரு கிலோ கிராம் 170 ரூபாய் முதல் 180 ரூபாய்க்கு இடையிலும் விற்கப்படுகின்றமையினால் பல்வேறான துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

அரிசி மட்டுமன்றி ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளும் இவ்வாறு அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் நெருக்கடியினை எதிர்நோக்கி வருகின்றனர். சந்தைக்கு கிடைக்கும் அரிசி தொகை குறைந்துள்ளதால், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரிசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் அரிசி விலை கட்டுப்பாட்டில் இருந்து விலகியுள்ளதுடன் அரிசி வர்த்தகர்கள் அரிசிகளுக்கான விலைகளை நிர்ணயித்து வருகின்றமையினால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed