ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறும் உணவுகளின் மீது மீண்டும் பலரின் கவனம் திரும்பியுள்ளது. புரதச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், சைவ உணவுகளில் போதுமான புரதம் கிடைக்காது என்கிறார்கள் சிலர். சைவ உணவுக்காரர்கள் புரதத்தேவைக்கு என்ன செய்வது… பருப்பு மட்டுமே சேர்த்துக்கொள்ளும்போது வாயுத் தொந்தரவு வருவதை எப்படித் தவிர்ப்பது என்பது போன்ற சந்தேகங்கள் தொடர்கின்றன. இதற்கான தீர்வு என்ன?
“மனிதர்களின் ஆரோக்கியத்தில் புரதச்சத்துக்கு முக்கியமான பங்குண்டு. கொரோனா காலத்தில்தான் அதன் தேவை பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் புரதம் முக்கியப் பங்காற்றுகிறது. அதனால்தான் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்துகிறார்கள். தசைகளின் வளர்ச்சிக்கும், ஆன்டிபாடி, ஹார்மோன்கள் மற்றும் என்ஸைம்களின் சுரப்புக்கும் புரதச்சத்து மிக அவசியம்.
பழைய செல்களைப் பழுதுபார்த்து, புதிய செல்களை உருவாக்கவும் புரதம் தேவை. சருமத்தைத் தொய்வின்றி வைத்திருக்க உதவும் கொலாஜனை சப்போர்ட் செய்து, இளமைத் தோற்றத்துக்கு உதவுவதிலும் புரதம் தேவைப்படுகிறது. இவ்வளவு ஏன்…. சருமம், நகங்கள் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கும் புரதம் மிக மிக அவசியம். எடைக்குறைப்பு முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு, சரியான எடையைத் தக்கவைத்து, தசைகளின் வளர்ச்சிக்கு உதவி, கொழுப்பைக் கரைப்பதில் உடலுக்கு உதவுவதும் புரதம்தான்.
சைவ உணவுக்காரர்கள் பருப்பில் மட்டும்தான் புரதம் இருக்கிறது என நினைத்துக் கொள்ள வேண்டாம். சைவ உணவுக்காரர்களுக்கு பனீர், தயிர், சோயா, டோஃபு என்ற சோயா பனீர், சோயா சங்க்ஸ், உலர்ந்த சோயா பீன்ஸ் பருப்பு, நட்ஸ், நட்ஸிலிருந்து பெறப்படும் வெண்ணெய், தயிர், பால், விதைகள், பச்சைப் பட்டாணி, கீன்வா, காளான்… இப்படி இன்னும் பல உணவுகளில் புரதச்சத்து கிடைக்கும். பால் உணவுகள்கூட எடுத்துக்கொள்ளாத வீகன் உணவுக்காரர்களுக்கும் பிரவுன் ரைஸ், பட்டாணி போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் புரோட்டீன் சப்ளிமென்ட்டுகள் கிடைக்கின்றன.
பருப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது வாயுத் தொந்தரவு வருவதாகப் பலரும் சொல்கிறார்கள். சமைப்பதற்கு முன்பாக, பருப்பை ஊறவைப்பது, முளைகட்டுவது, புளிக்கவைப்பது, ஆவியில் வேகவைப்பது போன்றவற்றின் மூலம் வாயுப் பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்கலாம். ஒருவேளை இப்படியெல்லாம் செய்தும் வாயுத் தொந்தரவு நீடித்தால் குறிப்பிட்ட அந்தப் பருப்பைத் தவிர்த்துவிடுங்கள்.
தினசரி உங்களுக்குத் தேவைப்படும் புரதத்தை மூன்று வேளை உணவுகளிலும் பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள். இரவு உணவுடன் எடுப்பதற்கு பதில் ஒருவேளை புரதத்தை மட்டும் மாலையில் எடுத்துக்கொள்ளவும். காய்கறிகளின் அளவை அதிகரிக்கும்போது கூடவே புரதமும் சரியான அளவுக்கு எடுத்துக்கொள்கிறீர்களா என்று பாருங்கள்.
உடலின் ஒவ்வொரு கிலோ எடைக்கும் ஒரு கிராம் அளவு புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது கணக்கு. 50 கிலோ எடை கொண்ட ஒருவர் தினமும் 50 கிராம் அளவு புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை உறுதிசெய்துகொள்ளுங்கள். புரதத்தின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமாக வாழுங்கள்“ என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.