சீனாவில் ஒரு குழந்தையை மாத்திரமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் பல தசாப்தங்களாக இருந்து வந்தது. இந்த சட்டம் இரண்டு பிள்ளைகளை பெற்றுக்கொள்ளலாம் என மாற்றியமைக்கப்பட்டது.
இந்த நிலையில் பெற்றோர் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என அண்மையில் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. சீனாவின் மக்கள்தொகை பெருக்கமானது கடந்த பல தசாப்தங்களை விட கடந்த 10 ஆண்டுகளில் பெருமளவில் குறைந்துள்ளமை மக்கள் தொகை கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது.
இந்த புள்ளிவிபரங்கள் ஏற்படுத்திய அழுத்தத்தின் காரணமாக, சீன அரசாங்கம் நாட்டு மக்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவித்து, மக்கள் தொகை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு பல சலுகைளை அறிவித்து வருகிறது.
புதிய சட்ட திருத்தத்துக்கமைய வடக்கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஜீலின்( Jilin Province)என்ற மாகாணத்தில் குழந்தை பிறக்கும் போது குழந்தையின் பெற்றோருக்கு பரிசு ஒன்றை வழங்க மாகாண நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர்.
இதனடிப்படையில் புதிதாக திருமணம் செய்த தம்பதிக்கு குழந்தை பிறக்கும் போது, சுமார் இரண்டு லட்சம் யுவான் வரையில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது. இந்த தொகையானது 31 ஆயிரத்து 400 அமெரிக்க டொலர்களாகும்.
இந்த திட்டமானது சீனாவில் மேலும் சில பிராந்தியங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளை கொண்டுள்ள பெற்றோருக்கு பெறுமதி சேர் வரியில் (VAT) இருந்து விலக்கும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.