• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முல்லைத்தீவு சிறுமி கொலை தொடர்பில் வெளிவரும் தகவல்கள்!

Dez 23, 2021

முல்லைத்தீவை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரின்  கொலை தொடர்பில் மேலதிக தகவல்கள் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளன.

முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனா இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த 15 ஆம் திகதி காணாமற்போன நிதர்சனா, கொலை செய்யப்பட்ட நிலையில் 18 ஆம் திகதி சடலமாக அவரது வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில் உள்ள பாழடைந்த வளவொன்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தார்.

கடந்த 15-12-2021 ஆம் திகதி தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள அக்காவின் வீட்டில் இரவு ஒளிரவிடப்பட்டிருந்த மின்குமிழ்களை அணைப்பதற்க்காக கூறி விட்டு சென்ற நிதர்சனா, பின்னர் காணாமல் போனதாக அவரது தாயாரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

 குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்ட இந்த சம்பவங்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் நிதர்சனா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது அக்காவின் கணவரை பொலிஸார் கைது செய்து விசாரணையை ஆரம்பித்தனர். பின்னர் இச் சம்பவம் தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, அக்கா, அத்தான் ஆகியோரை தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணையின் பின்னர் சிறுமியின் தந்தை கொலை தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகளை ஒப்புதல் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். தனது மகள் நிதர்சனா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், இதனை அறிந்த அவரது தாய் கருவை கலைப்பதற்கு முன்னர் சிறுமியை மயக்கமடைய செய்யும் நோக்கில், ஒரு மருந்து வழங்கப்பட்டதாகவும் அவரது தந்தையின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுமியின் கருவினை கலைக்கும் முயற்சியின்போது அவர் உயிரிழந்திருக்கலாம் என்பது தற்போதைய விசாரணையில் தெரியவந்திருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். எனினும், தாயார் விசாரணையில் மௌனமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் பற்கள் கழன்று விழுந்திருந்ததால், பற்களில் ஒன்றை மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.  

இந்நிலையில், இன்றையதினமும் (23-12-2021) குறித்த சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸார், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஜ்.சமுத்திரஜீவ மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேரத் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி, இராணுவத்தினர் போன்ற பலரும் நேரடியாக சென்று சம்பவ இடத்தில் இருந்த பழைய கிணற்றினை பார்வையிட்டதோடு நீண்ட நேரம் நீரில் ஊறிய அடையாளங்கள் நிதர்சனாவின் உடலில் காணப்பட்டதால், குறித்த கிணற்றின் நீரை இறைத்து பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், சிறுமியின் வீட்டிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், சிறுமியின் வீட்டில் இரத்த கறைபடிந்திருந்த மேசையினை சான்றுப்பொருளாக மன்றில் சமர்ப்பிக்குமாறு இதன்போது பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed