• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சத்தியத்தின் பாலன். எழுத்துருவாக்கம் சி.பாபு

Apr 18, 2021

சத்தியத்தின் பாலன்
14-07-1963 – 15-04-2021

ஆளுமை ஒன்று நம்மைவிட்டு அகன்று விட்டது.
தோழமை கொண்ட உள்ளம் ஒன்று தொலைந்துவிட்டது!
தேற்றுவாரின்றி நெஞ்சமெலாம் தேம்பியழுகிறது!
சமூகத்தின் சேவகனாய் சிறுப்பிட்டியின் காவலனாய்
கூப்பிடாமலே குரல்கொடுக்கும் குணவாளனாய்
பார்வையிலே பதில்சொல்லும் பண்பாளனாய்
பாதிவழியில் விட்டகலா பற்றாளனாய்
நேற்றுவரை எம்மோடிருந்தவன் இன்றில்லை…
எண்ணும் போதெல்லாம் இதயம் கனக்கிறது!
சத்திபாலு என்னும் பெயர் சிறுப்பிட்டியில் என்றும்
நீக்கமற நிலைத்திருக்கும்!

இவரது நினைவை மீட்டிப்பார்க்கிறேன்…
80பதுகளில் ஊரில் ஒரு நிகழ்வென்றால் அது சத்திபாலு இன்றி நடக்காது,
சத்திபாலு இல்லாத நிகழ்வு ஒரு நிகழ்வாகவும் இருக்காது.
திருவிழாவோ திருமணமோ சமையலிருந்து „சவுண்ட் சேர்வீஸ்“வரை சத்திபாலு சரிபார்த்துக்கொண்டிருப்பார்.
சளைப்பின்றி எதையும் இழுத்துப்போட்டு தனது வீட்டு நிகழ்வுபோல் நடத்திக்கொண்டிருப்பார்.
இவர் இருக்கும் இடம் எப்பவும் சுறுசுறுப்புடனேயே இயங்கும். இவரது கண்ணசைவிற்கும், கழுத்தசைவிற்கும், வாய்திறக்காமலே வரும் „செருமல்“ ஒலிக்கும் சுற்றியிருக்கும்
கூட்டம் கட்டுப்பட்டுப் பணியாற்றும்.
தொலைக்காட்சி வானொலி போன்ற இலத்திரணியல் சாதனங்களை தன்சுயமுயற்சியாலேயே பழுதுபார்க்கும் திறண்கொண்டவர்.
இயங்கமறுக்கும் வாடகை வீடியோ டெக்குகள் இவரது கைபட்டதும் இரவு பகல் எதுவித பிரச்சினைகளுமின்றி ஓடிக்கொண்டிருக்கும்.
இவரது இந்த அசாத்திய திறமை எமது கிராமத்துக்கு மட்டுமன்றி அயற்கிராமங்களும் அடிக்கடி உதவும்.
எந்த வாகனங்களையும் இலாவகமாக கையாளும் திறமை பெற்றவர் சத்திபாலு.
லான்ட் மாஸ்டரின் கிளைச்சை இழுத்து கியர்போடுவதும், தோட்டங்களை உழும்போது „பிளவை“ வளம் மாற்றி சமநேரத்தில் மெசினை திருப்பி ஆறங்குல அகலத்தில் ஆழத்தைக் கூட்ட காலால் எக்கி மிதித்து வந்த பாதையில் திரும்ப செல்லும் இவரது „ஸ்டைல்“ தனி ஸ்டைல்.
ஆட்டுப் பங்குபோடுவதிலும் ஆள் வல்லவர். இவரது கையே தராசாகி எலும்பிலிருந்து ஈரல்வரை சிறிதும் பிசாகாது
சம அளவில் இலையில் விழும்காட்சி இவரது நேர்மைக்குச் சாட்சி..
அண்மைக்காலங்களில் இடைக்கிடை ஊருக்குப்போய்வரும்போது சத்திபாலுவை சந்தித்திருந்தாலும் 2018ம் ஆண்டு
இவரோடு பழகிய தருணங்கள் இனிமையானவை, அதிகாலையில் வந்து நலம் விசாரிப்பதும் பொழுது சாய்ந்ததும்
கூடிப் பம்பல் அடித்ததும் இப்போதும் பசுமரத்தாணிபோல் பதிந்து கிடக்கின்றது.
போய்வாருங்கள் அண்ணா… அன்னதான அடுப்பங்கரையில் அகப்பை பிடிக்கவும்… வைரவர் தேர்முட்டி திறப்பதை மேற்பார்வை செய்யவும்… தேர்க்கால் இறக்கி ஏத்தவும்… அடுத்த தலைமுறைக்கு வடம் பிடித்துகொடுத்துவிட்டு சென்றுள்ளீர்கள்… தன்னலமற்ற உங்கள் தடம் பார்த்து நடப்போம்.

என்றும் உங்கள் நினைவுடன்
சி.பாபு

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed